ADDED : மே 09, 2024 04:23 AM

திருப்பூர், : ஆவின் பால் கூட்டுறவு சங்கம் வாயிலாக, கால் நடைகளுக்கு தீவனம் இலவசமாக வினியோகிக்க வேண்டுமென, பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில குழு கூட்டம், திருப்பூர் மா.கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் முகமதுஅலி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கொளந்தசாமி வரவேற்றார். கூட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் கால்நடைகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும், வைக்கோல் போன்ற உலர் தீவனம், பசுந்தீவனங்கள் இல்லாமலும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுஉள்ளது. இக்கட்டான நிலையில், பாலின் உற்பத்தி அளவும் குறைந்து வருகிறது.
தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, கலப்புத் தீவனங்கள் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், கால்நடை பராமரிப்பு கடும் சவாலாக மாறியுள்ளது. தமிழக அரசு, ஆவின் பால் கூட்டுறவு சங்கம் மூலமாக, தீவனம் இலவசமாக வழங்கி வந்தது.
தற்போதும், வைக்கோல் போன்ற உலர் தீவனம், மக்காச்சோள தட்டு போன்ற பசுந்தீவனங்களையும் கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெருமாள், பொருளாளர் முனுசாமி, மாநில நிர்வாகிகள் சிவாஜி, செல்லத்துரை, வெண்மணி சந்திரன், தீர்த்தகிரி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக, மாவட்ட செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.