/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொடுஞ்சாலை? அவிநாசி ரோட்டில் 'மரணக்குழி'கள் 'ஆபத்தான பயணம்' என மக்கள் அலறல்
/
கொடுஞ்சாலை? அவிநாசி ரோட்டில் 'மரணக்குழி'கள் 'ஆபத்தான பயணம்' என மக்கள் அலறல்
கொடுஞ்சாலை? அவிநாசி ரோட்டில் 'மரணக்குழி'கள் 'ஆபத்தான பயணம்' என மக்கள் அலறல்
கொடுஞ்சாலை? அவிநாசி ரோட்டில் 'மரணக்குழி'கள் 'ஆபத்தான பயணம்' என மக்கள் அலறல்
ADDED : மே 29, 2024 12:17 AM

திருப்பூர்:தடையில்லாத, விபத்தில்லாத பயணத்துக்கு வழிவகை ஏற்படுத்தும் நோக்கில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் நிலையில், திருப்பூர் - அவிநாசி நெடுஞ்சாலை, வாகன ஓட்டிகளை பாடாய்படுத்துகிறது.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகள் தடையில்லாமல், விபத்தில்லாமல் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் தான், நெடுஞ்சாலை என்ற அந்தஸ்துடன் சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. அதனால் தான், நெடுஞ்சாலைகளில் வேகத்தடை கூட அமைக்கப்படுவதில்லை.
ஆனால், திருப்பூர் - அவிநாசி தேசிய நெடுஞ்சாலை (எண்: 381) வாகன ஓட்டிகளை பாடாய்படுத்துகிறது. எஸ்.ஏ.பி., குமார்நகர் உள்ளிட்ட இடங்களில் சாலை பராமரிப்பின்றி உள்ளது; சாலையில் ஆங்காங்கே உள்ள சிறு குழிகளால், வாகன ஓட்டிகள், குறிப்பாக, டூவீலர் ஓட்டிகள் நிலைதடுமாறுகின்றனர்.
இதில், அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் மிக அதிகளவில் முளைத்திருப்பதால், நான்கு வழிச்சாலை 'சுருங்கி' இருவழிப்பாதையாகவே மாறியிருக்கிறது. குடிநீர் குழாய் பராமரிப்பு மற்றும் பதிக்கும் பணிக்கு ரோட்டோரம் தோண்டப்படும் குழி, சரிவர மூடப்படாததும், நெரிசலுக்கு காரணமாகிவிடுகிறது.
குறிப்பாக, குமார் நகர், எஸ்.ஏ.பி., பூண்டி, அனுப்பர்பாளையம், அணைப்புதுார் உள்ளிட்ட இடங்களில், சாலையோர ஆக்கிரமிப்பால், பஸ்கள், நடுரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றனர். இதனால், பின்வரும் வாகனங்கள் தடுமாறி நிற்க வேண்டியுள்ளது.
அந்தஸ்து இருக்கு...தகுதி இல்லை!
மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துவது, மேம்படுத்துவது, உறுதிபடுத்துவது, தரம் உயர்த்துவது, பாலங்கள் மறுசீரமைப்பது, தொடர்ந்து பராமரிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திருப்பூர் - அவிநாசி சாலை, அவ்வப்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டாலும், அது முழுமைப் பெறாத பணியாகவே இருக்கிறது. 'தேசிய நெடுஞ்சாலை' என்ற அந்தஸ்து பெற்று, அதற்கான தகுதியில்லாமல் உள்ளது என, வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.