/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி: பலவகை சிலைகள் தயாராகின்றன
/
விநாயகர் சதுர்த்தி: பலவகை சிலைகள் தயாராகின்றன
ADDED : ஆக 10, 2024 08:36 PM

''கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே''
அதிகாலை, சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக்குரல் ஒலிக்கும். விநாயகரை நோக்கி மனம் நினைக்கும். வீதியோர மரத்தடி விநாயகரை வணங்காவிடில் அன்றைய நாள் பொழுது பக்தர்களுக்குத் துவங்குவதில்லை.
வரும் செப்., 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இப்போதிருந்தே பக்தர்கள் தயாராகிவருகின்றனர். ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் அன்று பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள், விசர்ஜனம் செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார், அரசூர் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், பேப்பர் கூழ், கிழங்கு மாவு மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையின் பாகங்கள் திருப்பூர் வஞ்சிபாளையம் பிரிவு மற்றும் அலகுமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவை ஒட்டப்பட்டு தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடக்கிறது.
சிலைகளுக்கு 'வாட்டர் கலர்' பூசப்பட்டு வந்தது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணி முழுமையாக நிறைவு பெற்ற பின், இம்மாத கடைசியில் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இம்முறை, மயில் வாகன விநாயகர், முருக விநாயகர், லிங்க விநாயகர், கஜமுக விநாயகர், வில் ஏந்திய விநாயகர், யானை வாகனம், கருட, சிம்மவாகனம் என, பல வகை விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சிலைகள், 3.5, 5, 7, 9 மற்றும் 11 அடிகள் என, ஐந்து வகையில் தயாராகி உள்ளது.
ஹிந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் 2 லட்சம் இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
---
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூரில் ஹிந்து முன்னணி சார்பில் பலவகை விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.
ஆஞ்சநேயரைத் தோளில் சுமந்து செல்லும் விநாயகர்
ஜல்லிக்கட்டு விநாயகர்
யானை தலை மீது நிற்கும் விநாயகர்
நந்தி, மயில், சிங்க வாகனத்தில் விநாயகர்
தயாராகி வரும் பல்வேறு வகை சிலைகள்.