/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிணறு துார்வாரும் போது கிடைத்தார் 'விநாயகர்'
/
கிணறு துார்வாரும் போது கிடைத்தார் 'விநாயகர்'
ADDED : செப் 08, 2024 12:05 AM

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 70 அடி ஆழ கிணற்றில், செடி கொடிகள் முளைத்தும், புதர் மண்டியும், பாழடைந்து கிடந்தது.
இக்கிணறு, ஊராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளது. பழமையான கிணற்றுக்குள் செல்ல அமைக்கப்பட்டுள்ள நீண்ட படிக்கட்டுகள், பழமையை எடுத்துரைக்கிறது.
ஊராட்சித் தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி கூறுகையில், ''200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான இந்த கிணறு, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. முந்தைய காலங்களில்,
இக்கிணறு, நீச்சல் குளம் போல் குளிப்பதற்காக பயன்பட்டு வந்ததாக முன்னோர்கள் கூறியுள்ளனர். பின்னாளில், போதிய பராமரிப்பு இன்றி, புதர்கள் மண்டி பயன்பாடற்று போனது. நீண்ட காலத்துக்குப் பின், பழமையான இக்கிணறு தூர்வாரப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி கிணற்றைச் சுற்றிலும் தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
கிணற்றுக்குள் கிடைத்த விநாயகர்!
நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கிணற்றை துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, கிணற்றுக்குள் ஒன்றரை அடி உயரத்தில் விநாயகர் சிலை ஒன்று கிடைத்தது. இதனை இப்பகுதி மக்கள் மீட்டு, அரச மரத்தடியில் வைத்து வழிபட்டு வருகின்றனர். இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலை கிடைத்தது, இப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.