/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வற்றாத ஜீவநதிகளுக்கு வரையாடுகளே ஆதாரம்! மாநில விலங்கை பாதுகாக்க விழிப்புணர்வு
/
வற்றாத ஜீவநதிகளுக்கு வரையாடுகளே ஆதாரம்! மாநில விலங்கை பாதுகாக்க விழிப்புணர்வு
வற்றாத ஜீவநதிகளுக்கு வரையாடுகளே ஆதாரம்! மாநில விலங்கை பாதுகாக்க விழிப்புணர்வு
வற்றாத ஜீவநதிகளுக்கு வரையாடுகளே ஆதாரம்! மாநில விலங்கை பாதுகாக்க விழிப்புணர்வு
ADDED : பிப் 23, 2025 07:23 AM

உடுமலை : தமிழ் மாநில விலங்கான வரையாடுகள், புல் மலைகளில் வற்றாத ஜீவநதிகளுக்கு ஆதாரமாக உள்ளன. அவற்றை பாதுகாப்பது குறித்து வரையாடுகள் திட்டம் சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு வரையாடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சிமலைகளில், 140 இடங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரையாடுகள் காணப்படுகின்றன.
'கிராஸ் கில்ஸ்' எனப்படும் உயரமான புல்மலைகளில் மட்டும் வாழும் தனித்துவமான இந்த வரையாடுகளை பாதுகாக்கும் வகையில், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று, உடுமலை ஆர்.ஜி.எம்.,பள்ளி, அக் ஷரா பள்ளி, சின்னாறு, ஒன்பதாறு சோதனை சாவடி பகுதி, அமராவதி முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரும்புகள் அறக்கட்டளை சார்பில், வரையாடுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நாட்டிய நாடகம் நடந்தது.
நீலகிரி வரையாடு திட்ட வனச்சரக அலுவலர் செந்துார சுந்தரேசன், முதுநிலை ஆராய்ச்சியாளர் சுப்பையன், ஆரண்யா, அரும்புகள் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் பேசியதாவது:
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை வளமாக்கிய நொய்யல் ஆறு, மேற்கு தொடர்ச்சிமலையில், சிறுவானி கிழக்கு மலைச்சரிவு, வெள்ளியங்கிரி மலைச்சரிவுகளில் உற்பத்தியாகிறது.
கடந்த, 14ம் நுாற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழில், வெள்ளியங்கிரி மலைப்பகுதி, மேல்முடி பகுதியிலுள்ள குருடிமலை முருகன் கோவில் பகுதியினை குறிப்பிட்டு, லட்சக்கணக்கான எண்ணிக்கையில் மலை ஆடுகள் வாழ்ந்ததாக கூறுகிறார்.
ஆனால், இன்று அருணகிரிநாதன் குறிப்பிட்ட மலைப்பகுதிகளில் வரையாடுகளும், புல்மலைப்பகுதிகளும் இல்லை. வற்றாத ஜீவநதியாக இருந்த நொய்யல் ஆற்றில் மழைக்காலங்களில் மட்டும் நீர் வரத்து காணப்படுகிறது.
அமராவதி அணையின் பிரதான நீர் வரத்தாக உள்ள சின்னாறு, வால்பாறை, புல்மலைச்சுற்றுக்களில் நீர் உற்பத்தியாகிறது. இப்பகுதியிலுள்ள புல் மலைகளில் வரையாடுகள் வாழ்வதால், அந்த மலை தன்மை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. புல்மலை ஈர்த்து வைத்திருக்கும் நீரை சிறிது சிறிதாக வெளியிடுவதால், சின்னாற்றில் ஆண்டு முழுவதும் நீர் வரத்து உள்ளது.
வற்றாத ஜீவநதிகளுக்கு ஆதாரமாக உள்ள புல்மலைகள், வரையாடுகள் உள்ளன. அதனால், புல்மலையையும், வரையாடுகளையும் பாதுகாக்க வேண்டும். இதற்காக, பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, பேசினார்.

