/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெறிநாய்கள் கடித்து பலியாகும் ஆடுகள்
/
வெறிநாய்கள் கடித்து பலியாகும் ஆடுகள்
ADDED : செப் 17, 2024 11:54 PM
திருப்பூர் : வெள்ளகோவில் சுற்றுப் பகுதியில் தெரு நாய் களால் ஆடுகள் பலியாவதை தடுக்கும் வகையில், தெரு நாய்களை பிடிக்கும் பணி துவங்கியுள்ளது.
காங்கயம் மற்றும் வெள்ளகோவில் சுற்றுப்பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பு தொழில் உள்ளது. குறிப்பாக, ஆடு வளர்ப்பு மூலமாக பலரும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு மாதமாக இரவு நேரங்களில் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து, தெரு நாய்கள், ஆடுகளை கடித்து குதறி கொன்று விடுவது வாடிக்கையாகிவிட்டது.
வெறி நாய் கடித்து ஆடுகள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்தது. விவசாயிகள், இறந்த ஆடுகளுடன் வந்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாள் முன்பு, தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து துரத்தியதால், அச்சத்துடன் ஓடிய வெள்ளாடுகள் கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியாகியது. இது பலரையும் கலங்க வைத்தது. விவசாயிகள் ஆடுகளை காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என விவசாயிகள் அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, திருப்பூரில் செயல்படும் தங்கம் மெமோரியல் டிரஸ்ட் மற்றும் வெள்ளகோவில் நகராட்சி பணியாளர்கள் இணைந்து, நேற்று தெரு நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிடிக்கப்படும் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
தெருநாய்களை பிடிப்பதாக கூறி வீட்டில் வளர்க்கும் நாய்களை பிடித்து விட்டால் பிரச்னை தீராது. இரவு நேரங்களில் ஆட்டு பட்டியலை சுற்றி வரும் வெறி நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.