/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் பஞ்சம் போக்கும் வரையாடுகள்
/
தண்ணீர் பஞ்சம் போக்கும் வரையாடுகள்
ADDED : மார் 02, 2025 04:53 AM

ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் சீவக சிந்தாமணியில் வரையாடுகள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளன. உலகில் அரேபியன் வரையாடு, இமாலயன் வரையாடு மற்றும் நீலகிரி வரையாடுகள் என, மூன்று இனங்கள் உள்ளன.
இதில், தமிழகம் மற்றும் கேரளா சார்ந்த, மேற்கு தொடர்ச்சி மலை முகடுகளில் மட்டுமே காணப்படும் 'நீலகிரி வரையாடு' இனம் என்பது, மேற்கு தொடர்ச்சி மலை தரும் ஆறு, ஓடைகளின் நீர் வளத்தை பாதுகாக்கும் அரிய வகை விலங்கினமாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
மலை ஆடுகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் மூணாறில் உள்ள சரணாலயத்தில் வரையாடுகள் உள்ளன. மேலும் வால்பாறை, முக்கூர்த்தி, நீலகிரி, ஆழியாறு, களக்காடு, முண்டந்துரை, மேகமலை, திருவில்லிப்புத்துார், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட, 17 இடங்களில் இவை காணப்படுகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலை முகடுளில், 800 மீ., முதல், 2,000 மீ., உயரத்தில் இவை வாழ்கின்றன; இதனால், 'மலை ஆடுகள்' எனவும் அழைக்கப்படுகின்றன.சோலைக்காடுகள், மலை முகடுகளில் உள்ள புல்வெளிகள், மழைநீரை தேக்கி வைத்து, 'ஸ்பான்ச்' போன்று, அவ்வப்போது நீரை வெளியேற்றும்.
இவை தான் ஓடையாக, நதியாக, சிறு, பெரிய ஆறுகளாக உருவெடுக்கிறது. மழைநீரை சேமிக்கும் புல்வெளிகளில், நுனிப்புல்லை வரையாடுகள் மேய்ந்து, உணவாக்கிக் கொள்வதன் வாயிலாக, புல்வெளிகள் சமச்சீராக பராமரிக்கப்படுகின்றன. இதனால், நீர்வளம் என்பது, வற்றாத நிலையில் இருந்துக் கொண்டே இருக்கும்.
சிறப்பு திட்டம்
'அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதன் வாயிலாக, வரையாடு இனத்தை பாதுாக்க முடியும்' என்ற நோக்கில் தான், கடந்த, 2023 அக்., மாதம், 25 கோடி ரூபாய் நிதியில் 'வரையாடுகள் பாதுகாப்பு' என்ற சிறப்பு திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்துக்கென, உதவி இயக்குனர் பணியிடமும் உருவாக்கப்பட்டது. அதன்படி, அவற்றின் வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தவிழிப்புணர்வு, ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காடு அழிப்பு கூடாது...
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் நீர் வளம் செழிக்க, அமராவதி, பவானி, நொய்யல் போன்ற, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் நீராதாதாரத்தில் இருந்து உருவெடுக்கும் ஆறுகள் தான் முக்கிய காரணமாக உள்ளன. கொங்கு மண்டல மாவட்டம் மட்டுமின்றி, மாநிலம் முழுக்க உள்ள பல ஆறுகள், மேற்கு தொடர்ச்சி மலை நீராதாரத்தை நம்பியுள்ளன. வரையாடுகள் அதிகமானால், புல்வெளி காடுகள் அதிகமாகி, மழைநீர் ஆதாரங்கள் பெருகும்.
எனவே தான், இவை பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக உள்ளது. தமிழகத்தின் தாகம் தீர்க்கும் சூழல் பாதுகாப்பின் முக்கியமான இனமாக வரையாடுகள் இருப்பதால் தான்,மாநில விலங்கு என்ற அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது. தமிழகத்தில், 1,200; கேரளாவில், 2,000 என்ற எண்ணிக்கையில் மட்டுமே அவை உள்ளன. அழிந்து வரும் இனங்களில் சிவப்பு பட்டியலில் உள்ளது. காடுகள் ஆக்கிரமிப்பு மற்றும் அழிப்பு, அன்னிய புற்செடிகள் அதிகரிப்பு, காட்டுத்தீ, மனித வேட்டை ஆகியவை, வரையாடுகளின் எண்ணிக்கை குறைய முக்கிய காரணம்.
- ராஜ மதிவாணன், 'அரும்புகள்' அமைப்பின் நிறுவனர்.
நொய்யல் வற்ற இதுவும் காரணம்
சிறுவாணி கிழக்கு மற்றும் வெள்ளியங்கிரி மலைச்சரிவு பகுதிகளில் உற்பத்தியாகி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதியில் நொய்யல் ஆறு பாய்கிறது. 14ம் நுாற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழில், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில், மேல்முடி பகுதியில் உள்ள குருடுமலை முருகன் கோவில் பகுதியை குறிப்பிட்டு, அங்கு லட்சக்கணக்கில் மலை ஆடுகள் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்று, அருணகிரிநாதர் குறிப்பிட்ட பகுதிகளில் வரையாடுகள் இல்லை.
புல்வெளிகளும் இல்லாததால், நொய்யல் ஆற்றில் மழைக்காலங்களில் மட்டுமே நீர் வரத்து காணப்படுகிறது. அதே நேரம், வால்பாறை வனச்சரகம் புல்மலை பகுதியில், அமராவதி அணையின் முக்கிய நீர்வரத்தான சின்னாறு உற்பத்தியாகிறது. இப்பகுதியில் உள்ள புல் மலைகளில் நீலகிரி வரையாடுகள்வாழ்வதால், சின்னாற்றில் ஆண்டு முழுக்க நீர்வரத்து இருந்து கொண்டே இருக்கிறது. எனவே, வரையாடுகளின் வாழ்விடத்தை பாதுகாப்பது, மாநிலத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் என்பதை உணர வேண்டும். இதனால் தான் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாநிலம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- கணேஷ்ராம், நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர்.