/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விண்ணில் வீச்சு கொண்டு வரம் தரும் காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன்
/
விண்ணில் வீச்சு கொண்டு வரம் தரும் காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன்
விண்ணில் வீச்சு கொண்டு வரம் தரும் காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன்
விண்ணில் வீச்சு கொண்டு வரம் தரும் காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன்
ADDED : ஆக 16, 2024 12:18 AM

கொங்கு மண்டலமான கோவை- மற்றும் திருப்பூருக்கு இடையே, பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் ஊராட்சி, காரணம்பேட்டையில் அமைந்துள்ளது அருள்மிகு வீரமாத்தி அம்மன் கோவில்.
நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து கோவில் நிர்வாகி காவீ. பழனிசாமி கூறியதாவது:
காரணம்பேட்டையின் பழைய பெயர் இலந்தைமடை என்பதாகும். ஏறத்தாழ, 200 ஆண்டுகளுக்கு முன், இந்த ஊர் காரணம்பேட்டையின் வட கிழக்கு மூலையில் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பிளேக் நோய் என்ற கொடிய ஆட்கொல்லி நோய் இந்த ஊர் மக்களை தாக்கியதில் பலரும் உயிரிழந்தனர். இந்த நோயிலிருந்து தப்பிப்பதற்காக , அன்றைய அரசின் உதவியோடு தற்போதைய காரணம்பேட்டைக்கு குடியேறினர்.
பிளேக் நோயிலிருந்து தப்புவதற்காக இடம் பெயர்ந்த காரணத்தினாலும், இப்பகுதியில் காரணப்பெருமாள் அருள்பாலித்து வந்ததாலும், காரணம்பேட்டை என இந்த ஊர் பெயர் பெற்றது. காரணம்பேட்டையில், கோவை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு வடக்கே, 200 மீ., தூரத்தில், வீரமாத்தி அம்மன் அருள்பாலிக்கிறார்.
கொங்கு வேளாளர் சமூகத்தில் காடை குலத்தவர்களுக்கு இக்கோவில் பாத்தியப்பட்டது. இதன் காணிகள், காரணம்பேட்டை, தொட்டிபாளையம், காமநாயக்கன்பாளையம், செம்மிபாளையம் ஆகிய ஊர்களாகும்.
அம்மன் அருள்
வீரமாத்தி அம்மன் வலது காலை மடித்து, இடது காலை தாமரை பூவின் மீது வைத்த நிலையில், சிம்ம வாகன பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். திருவாச்சியின் உச்சியில் யாழியுடனும், இடது கையில் கும்பம், வலது கையில் அமிர்த கலசம் ஏந்தியபடி வடக்கு முகமாக அருள்பாலிக்கிறாள். கோவிலில், மரத்தினால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தேரில், பவுர்ணமி தினத்தில், சிறப்பு வழிபாடுகளுடன் அம்மன் கோவிலைச் சுற்றி வலம் வருவது வழக்கம்.
இந்நாளில், பவுர்ணமி முழு நிலவுக்கும் வழிபாடு நடக்கும். முன் மண்டபத்தின் வலப்புறம் விநாயகர், இடப்புறம் முருகப்பெருமான் மற்றும் கோவில் வளாகத்தில் கருப்பராயன், கன்னிமார்கள் மற்றும் தொட்டிச்சி அம்மன் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். கோவில் தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. இத்துடன், நட்சத்திர மரங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன.
திருவிழாக்கள்
ஆண்டுதோறும் கார்த்திகை தீபம், விநாயகர் சதுர்த்தி, ஆண்டு விழா, ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு மற்றும் கருப்பராயனுக்கு மட்டும் கிடா வெட்டி வழிபாடு செய்வது ஆகியவை இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக, ஆடி மாத ஐந்து வெள்ளிக்கிழமைகளில், மலர், கார், கனி, வளையல் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்படுவது மிகவும் சிறப்பாகும். இதுதவிர ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, கார்த்திகை நாட்கள் மற்றும் அனைத்து விசேஷ நாட்களிலும் அன்னதானம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கோவிலின் சிறப்பு
மண்ணில் பிறந்தோர்க்கு மாதவந் தரும்
கண்ணில் கொண்டோருக்கு கயிலையுந் தரும்
கண்ணில் பாடியோருக்கு பரமசுகந் தரும்
விண்ணில் வீச்சு கொண்டு வரம் தரும் வீரமாத்தி தாயே!
எனும் பாடலில் இருந்து காரணம்பேட்டை வீரமாத்தி அம்மனின் பெருமைகளை அறியலாம்.
கோவிலின் தென்பகுதியில் கிழக்கில் இருந்து மேற்காக வானாமடை எனும் சிற்றோடை செல்கிறது. இது புனித நதியான நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இந்த சிற்றோடையின் கரையில் வீரமாத்தி அம்மன் அருள்பாலிக்கிறார். திருமணம், குழந்தையின்மை உள்ளிட்டவற்றுக்காக பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். குறிப்பாக, நினைத்த காரியத்தை நிறைவேற்றும் தெய்வமாக காரணம்பேட்டை அருள்மிகு வீரமாத்தி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.

