/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு ;இந்திய செயற்கை நுாலிழை ஏற்றுமதி உயர்வு
/
வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு ;இந்திய செயற்கை நுாலிழை ஏற்றுமதி உயர்வு
வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு ;இந்திய செயற்கை நுாலிழை ஏற்றுமதி உயர்வு
வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு ;இந்திய செயற்கை நுாலிழை ஏற்றுமதி உயர்வு
ADDED : செப் 04, 2024 02:07 AM

திருப்பூர்;வெளிநாடுகளில் வரவேற்பு அதிகரித்துள்ளதால், இந்தியாவின் செயற்கை நுாலிழை, துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.
அந்நிய செலாவணியை ஈட்டும் வகையில், நம் நாட்டில் இருந்து, மதிப்பு கூட்டப்பட்ட ஆடையாக ஏற்றுமதி செய்ய வேண்டுமென, மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இருப்பினும், நம் நாட்டில் இருந்து, பருத்தி நுாலிழை மற்றும் துணி, ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
கடந்த, 10 ஆண்டுகளாக, செயற்கை நுாலிழை மற்றும் துணி உற்பத்தியும், அவை சார்ந்த ஜவுளி பொருட்கள் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. உள்நாட்டு சந்தைகளில், செயற்கை நுாலிழை ஆடைகளுக்கு வரவேற்பு குறைவு என்பதால், ஏற்றுமதியை எதிர்பார்த்தே செயற்கை நுாலிழை உற்பத்தி நடந்து வருகிறது.
கொரோனா தொற்றால் உலக நாடுகள் கடும் பின்னடைவை சந்தித்தன; அதற்கு பிறகு, இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதன்காரணமாக, செயற்கை நுாலிழை மற்றும் பருத்தி நுாலிழை ஏற்றுமதியும் சரிந்தது. நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளது.
பருத்தி நுாலிழை, துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி, 2023 ஜூலையில், 8,295 கோடி ரூபாயாக இருந்தது. ஆகஸ்டில், 8,092 கோடியாக குறைந்தது. இருப்பினும், கடந்த ஏப்., முதல் ஜூலை வரையிலான நான்கு மாத ஏற்றுமதி, 32 ஆயிரத்து, 422 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; இது, முந்தைய ஆண்டின் இதேகாலகட்டத்தில், 30 ஆயிரத்து, 970 கோடியாக இருந்தது.
செயற்கை நுாலிழை ஆடை வர்த்தகம் உலக அளவில் பிரதானமாக இருக்கிறது. இதனால், இந்தியாவின் இவ்வகை நுால், துணி மற்றும் ஜவுளி ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம், 3,206 கோடியாக இருந்த ஏற்றுமதி, கடந்த மாதம், 3,390 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல், ஏப்., முதல் ஜூலை வரையிலான நான்கு மாதகால ஏற்றுமதி, கடந்தாண்டு, 12 ஆயிரத்து, 750 கோடியாக இருந்தது, இந்தாண்டு, 13 ஆயிரத்து, 112 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) அதிகாரிகள் கூறுகையில், ''கொரோனா பாதிப்புக்கு பிறகு, செயற்கை நுாலிழை மற்றும் துணி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்திய பருத்தி, செயற்கை நுாலிழை மற்றும் துணிகளுக்கு, வெளிநாடுகளில் கிராக்கி அதிகம். உள்நாட்டில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி சூடுபிடிக்காததால், நுால் மற்றும் துணி ஏற்றுமதி அதிகரித்துள்ளது,'' என்றனர்.