/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளுக்கு நோட்டு - புத்தகங்கள் வந்தன
/
அரசு பள்ளிகளுக்கு நோட்டு - புத்தகங்கள் வந்தன
ADDED : மே 31, 2024 01:27 AM
பல்லடம்;ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்பு மாணவ, மாணவியருக்கான நோட்டுப் புத்தகங்கள், அரசு பள்ளிகளுக்கு கொண்டுவரப்பட்டன.
கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 6 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ மாணவியருக்கான நோட்டு - புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகிக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, 85 அரசு துவக்க நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தமிழ் வழியில், 7,929 மாணவ மாணவியர், ஆங்கில வழியில், 2,312 மாணவ மாணவியர் என, மொத்தம், 10,241 மாணவர்கள் உள்ளனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில், மூன்று பருவங்களுக்குமான நோட்டு - புத்தகங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், நேற்று, முதல் பருவத்திற்கான நோட்டு - புத்தகங்கள், பல்லடம் அரசு கல்லுாரியில் வழங்கப்பட்டன. முன்னதாக, திருப்பூரில் இருந்து நோட்டு - புத்தகங்கள் கல்லுாரியில் வந்திறங்கின. பல்லடம் ஒன்றியத்தை சேர்ந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், இவற்றை எடுத்துச் செல்வதற்காக வரவழைக்கப்பட்டனர். இவர்கள் பள்ளிகளுக்கு இவற்றை வாகனங்கள் மூலம் எடுத்துச்சென்றனர்.
ஆசிரியர்கள் தவிப்பு
அந்தந்த பள்ளிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வினியோகிக்க வேண்டும் என்றுதான் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பணிகளை ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டி உள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில், 80 சதவீதம் பெண் ஆசிரியர்களே வேலை பார்க்கின்றனர். நோட்டுப் புத்தகங்களை துாக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றுவது முதல் பள்ளிகளில் அவற்றை இறக்கி வைப்பது வரை அனைத்து பணிகளையும் நாங்களே செய்ய வேண்டி உள்ளது. பெண்கள் என்பதுடன், வயதானவர்களும் இருப்பதால் இது போன்ற பணிகள் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.
அதிகாரி சொல்வதென்ன!
இது வழக்கமாக நடக்கும் பணி என்பதால், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், அவரவர் பள்ளிக்கு தேவைப்படும் நோட்டுப் புத்தகங்களை எண்ணி எடுத்து கட்டி வைக்கின்றனர். நிர்வாக செலவில் ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களை தவிர்க்கும் வகையில் அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
- சசிகலா, வட்டார கல்வி அலுவலர்