ADDED : மே 03, 2024 11:39 PM
திருப்பூர்;திருமணம் செய்து வைக்க மறுத்த தாத்தாவை அடித்து கொன்ற பேரனை போலீசார் கைதுசெய்தனர்.
முத்துார் அடுத்த ந.கரையூரை சேர்ந்த சேமலை மகன் அருண்குமார், 27. அவர் தாத்தா முனியப்பன். 70. அருண்குமார், மலையாத்தாபாளையத்தில் உள்ள ஒரு பெண்ணை விரும்பியுள்ளார். அப்பெண் ஏற்கனவே திருமணமானவர்.
இதனால், முனியப்பன் அருண்குமாரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது என மறுத்துள்ளார்.கடந்த இரண்டு நாள் முன் இது குறித்து தாத்தா மற்றும் பேரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார், முனியப்பனை அவரது கைத்தடியை கொண்டு தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த முனியப்பன் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.
வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.