/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வண்டல் மண் பெயரில் கிராவல் மண் கடத்தல்? அனுப்பட்டி மக்கள் குற்றச்சாட்டு
/
வண்டல் மண் பெயரில் கிராவல் மண் கடத்தல்? அனுப்பட்டி மக்கள் குற்றச்சாட்டு
வண்டல் மண் பெயரில் கிராவல் மண் கடத்தல்? அனுப்பட்டி மக்கள் குற்றச்சாட்டு
வண்டல் மண் பெயரில் கிராவல் மண் கடத்தல்? அனுப்பட்டி மக்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 24, 2024 11:54 PM
பல்லடம் : வண்டன் மண் எடுக்க அனுமதி பெற்று கிராவல் மண் கடத்தப்படுவதாக, அனுப்பட்டி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 285 நீர் நிலைகளில் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள திருப்பூர் மாவட்ட கலெக்டர்கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி, பல்லடம் ஒன்றியத்தில் கரடிவாவி, ஆறுமுத்தாம்பாளையம், அனுப்பட்டி, கரைப்புதூர், பணிக்கம்பட்டி, செம்மிபாளையம், வடுகபாளையம் புதூர், கே. கிருஷ்ணாபுரம், புளியம்பட்டி, பருவாய், கணபதிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு நீர்நிலைகளிலும் களிமண், வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை பயன்படுத்தி, கனிமவள கடத்தல் நடப்பதாக அனுப்பட்டி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக, சரியான மழைப்பொழிவு இல்லாததால், அனுப்பட்டி குட்டையில் வண்டல் மண் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. வண்டல் மண் எடுத்து விவசாயிகள் பயன்படுத்துவதை வரவேற்கிறோம்.
ஆனால், வண்டல் மண் எடுப்பதாக அரசிடம் இருந்து அனுமதி பெற்று, சிலர் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். வண்டல் மண் எடுக்க நினைத்தாலும், சாதாரண விவசாயிகளிடம், போதிய வண்டி வாகன வசதிகள் கிடையாது. எனவே, வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த அனுமதியைப் பெற்று, கனிமவள கடத்தலில் ஈடுபடுகின்றன.
இவ்வாறு, கடந்த சில நாட்களாக, அனுப்பட்டி குட்டையில் இருந்து கிராவல் கடத்தப்பட்டு, பல்லடம் பொள்ளாச்சி ரோட்டில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

