/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடியில் அசத்துகிறது பச்சை மிளகாய்: விலையில் 'சுர்ர்ர்'
/
ஆடியில் அசத்துகிறது பச்சை மிளகாய்: விலையில் 'சுர்ர்ர்'
ஆடியில் அசத்துகிறது பச்சை மிளகாய்: விலையில் 'சுர்ர்ர்'
ஆடியில் அசத்துகிறது பச்சை மிளகாய்: விலையில் 'சுர்ர்ர்'
ADDED : ஜூலை 24, 2024 08:36 PM

உடுமலை: தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், தட்டுப்பாடு அதிகரித்து, பச்சை மிளகாய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது; பிற மாவட்ட வியாபாரிகள் நேரடியாக கொள்முதலை துவக்கியுள்ளனர்.
உடுமலை சின்னவீரம்பட்டி, கண்ணமநாயக்கனுார், மருள்பட்டி, பாப்பனுாத்து, குட்டியகவுண்டனுார் உள்ளிட்ட பகுதிகளில், ஆண்டு முழுவதும், குறிப்பிட்ட இடைவெளியில் பச்சை மிளகாய் சாகுபடி செய்கின்றனர்.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையும், ஏப்., மே மாதத்தில் கோடை மழையும் பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறு மற்றும் போர்வெல்களில், தண்ணீர் போதுமான அளவு கிடைக்கவில்லை.
இதனால், காய்கறி சாகுபடிக்கு திட்டமிட முடியாமல் விவசாயிகள் திணறினர். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், பரவலாக பச்சை மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
நாற்றுப்பண்ணைகளில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வளர்ந்த நாற்றுகளை வாங்கி, மேட்டுப்பாத்தி அமைத்து சொட்டு நீர் பாசனம் வாயிலாக செடிகளுக்கு பாசனம் செய்தனர்.
ஆடி மாதம் துவங்கியதும், பச்சை மிளகாய் அறுவடையும் துவங்கியது; சாகுபடி பரப்பு குறைந்து, தேவை அதிகரித்ததால் விலையும் 'கிடுகிடு'வென உயரத்துவங்கியது.
நேற்றைய நிலவரப்படி, விவசாயிகளிடமிருந்து பிற மாவட்ட வியாபாரிகள் நேரடியாக, பச்சை மிளகாயை கிலோ, 105 - 110 ரூபாய் வரை கொள்முதல் செய்து வருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு விலை அதிகரித்தாலும், குறைந்தளவே பச்சை மிளகாயை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: பச்சை மிளகாயை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்தாலும், ஏதாவது ஒரு சீசனில் மட்டுமே விலை கிடைக்கும்.
இந்தாண்டு ஆடி அறுவடையில் விலை கிடைத்து வருகிறது. சீதோஷ்ண நிலை சீராக இருந்தால், மகசூலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

