/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குறைகள் தாராளம்' தேர்தல் பார்வையாளரிடம் 'குமுறிய' கட்சியினர்
/
'குறைகள் தாராளம்' தேர்தல் பார்வையாளரிடம் 'குமுறிய' கட்சியினர்
'குறைகள் தாராளம்' தேர்தல் பார்வையாளரிடம் 'குமுறிய' கட்சியினர்
'குறைகள் தாராளம்' தேர்தல் பார்வையாளரிடம் 'குமுறிய' கட்சியினர்
ADDED : மார் 29, 2024 12:51 AM

'சுவிதா' போர்ட்டல் மந்தமாக உள்ளதால், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல் நீடிப்பதாக தேர்தல் பார்வையாளர்களிடம் அரசியல் கட்சியினர் கூறினர்.
திருப்பூர், மார்ச் 29-
லோக்சபா தேர்தல் ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ் முன்னிலைவகித்தார். திருப்பூர் லோக்சபா தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் ஹிமான்சு குப்தா (பொது), அசோக்குமார் (செலவினம்) தலைமைவகித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று, தேர்தல் பொதுக்கூட்டங்கள், வாகன பிரசாரங்களுக்கு அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து தெரிவித்தனர்.
நந்தகோபால் (ம.கம்யூ.,):
நாமக்கல் போன்ற மாவட்டங்களிலெல்லாம், அரசியல் கட்சியினருக்கு, தேர்தல் நடைமுறைகள், புகார்குறித்து தெரிவிக்கவேண்டிய அதிகாரிகளின் தொடர்பு எண் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன; திருப்பூர் மாவட்டத்தில்மட்டும், அரசியல் கட்சியினருக்கு அவ்விவரங்கள் வழங்கப்படவில்லை.
பொதுக்கூட்டங்களுக்கு அனுமதிகோரும் ஆன்லைன் விண்ணப்பத்தில், கொடி கட்டுவது தொடர்பான எந்த விவரமும் இடம்பெறவில்லை. அதனால், பொதுக்கூட்டங்களில் கட்சிக்கொடி கட்டக்கூடாது என்கின்றனர். கொடி கட்டாமல்; சின்னங்களை காட்டாமல் எப்படி தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த முடியும்.
திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து லோக்சபா தொகுதிகள் உள்ளன. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் பிரசார அனுமதி வழங்கப்படுகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள், மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு, வெவ்வேறு இடங்களில் அனுமதி பெறவேண்டியுள்ளதால் சிரமம் ஏற்படுகிறது.
தேர்தல் பார்வையாளர் ஹிமான்சு குப்தா:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பு அலுவலரை நியமித்து, மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு ஒரே இடத்தில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்ணபிரான் (அ.தி.மு.க.,):
லோக்சபா தொகுதி முழுவதும் வாகன பிரசாரம் மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. கோபி, பவானி, அந்தியூர் சட்டசபை தொகுதிகளில் பிரசாரத்துக்கு செல்லும்போது, குறிப்பிட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேட்டு, வாகனங்களை நிறுத்தி போலீசார் கெடுபிடி செய்கின்றனர். இதுகுறித்து, போலீசாருக்கு சரியான அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும்.
'சுவிதா' போர்ட்டல் படு மந்தமாக உள்ளதால், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதிகேட்டு, 48 மணி நேரத்துக்குள் விண்ணப்பிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இவ்வாறு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார் பேசுகையில், ''வரும் ஏப்., 19ம் தேதி, ஓட்டுப்பதிவு நாள். அமைதியான முறையில், தேர்தல் நடைபெறுவதற்கு, அனைத்து அரசியல் கட்சியினரின் ஒத்துழைப்பும் அவசியம். தேர்தல் தொடர்பான எவ்விதமான பிரச்னைகள், புகார்களையும் உடனுக்குடன் தெரிவியுங்கள்; அவற்றுக்கு விரைந்து தீர்வுகாணப்படும்,'' என்றார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பவன்குமார், சவுமியா உள்பட தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

