/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகள் தீரும்; நம்பிக்கை குறையாத மக்கள்
/
குறைகள் தீரும்; நம்பிக்கை குறையாத மக்கள்
ADDED : ஆக 19, 2024 11:28 PM

திருப்பூர்;மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மக்களிடமிருந்து மொத்தம் 752 மனுக்கள் பெறப்பட்டன.
பட்டா இடம் ஆக்கிரமிப்பு?
அவிநாசி தாலுகா, காளிபாளையத்தில், 18 ஆண்டுகளுக்கு முன்பு, பட்டியலின மக்கள் 27 பயனாளிகளுக்கு தலா 2 சென்ட் வீதம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தை தனியார் கம்பிவேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாகவும்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வீட்டுமனை பட்டா பெற்ற மக்கள், கருப்பு துணியால் கண்களை கட்டியவாறு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்; கலெக்டரிடம் மனு அளித்தனர்.
வயநாடுக்காக நிதி
திருப்பூர் வாவிபாளையம் அரசு பள்ளி மாணவியர், வயநாடு நிலச்சரிவில் பாதித்த மக்களுக்காக திரட்டிய நிதியை, குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.
மினி பஸ்கள் நிறுத்தம்
பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் அளித்த மனு:
பல்லடம் நகரின் மத்தியில் அமைந்துள்ள பச்சாபாளையத்தில், ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமளக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் இயங்கிய மினிபஸ்கள், சமீபகாலமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அரசு பள்ளி மாணவ, மாணவியர், பெண்கள், தொழிலாளர்கள் பஸ் வசதியின்றி பரிதவிக்கின்றனர். அதிக கட்டணத்தில் ஆட்டோவில் பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பச்சாபாளையத்திலிருந்து பல்லடம் பஸ் ஸ்டாண்ட் வரை, ஆட்டோக்களில், 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் மீண்டும் மினிபஸ் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அனுமதி கூடாது
குன்னத்துார் பகுதி அனைத்து கட்சியினர் அளித்த மனு:
ஊத்துக்குளி தாலுகா குன்னத்துார் பேரூராட்சி 10வது வார்டில், தனியார் மன மகிழ் மன்றம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. மக்களின் எதிர்ப்பால், ஏற்கனவே இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டுள்ளது. குடியிருப்பு, பள்ளி, கோவில் அமைந்துள்ள பகுதியில், மன மகிழ் மன்றம் அமைத்தால், மக்களுக்கு இடையூறு ஏற்படும்; சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் அடிக்கடி நிகழும். எனவே, மன மகிழ் மன்றம் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது.
இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளித்தனர்.
---
கலெக்டர் அலுவலக குறைகேட்பு முகாமில், நேற்று அவிநாசி, காளிபாளையத்தில் வீட்டு மனைப்பட்டா பெற்ற பயனாளிகள், தங்கள் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி, கண்களில் கருப்புத்துணி கட்டி தர்ணா மேற்கொண்டனர்.
ஊத்துக்குளி தாலுகா, குன்னத்துார் பேரூராட்சி மக்கள், மனமகிழ் மன்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.