/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரை மட்டப்பாலம் விரிவாக்கப்பணி துவக்கம்
/
தரை மட்டப்பாலம் விரிவாக்கப்பணி துவக்கம்
ADDED : ஏப் 24, 2024 11:16 PM

பல்லடம்: பல்லடத்தில் உள்ள -பொள்ளாச்சி ரோடு, உடுமலை வழியாக கேரள மாநிலத்தை இணைக்கிறது. கறிக்கோழி வாகனங்கள், சரக்கு, மணல் லாரிகள், கன்டெய்னர்கள் உள்ளிட்டவை செல்லும் முக்கிய வழித்தடமாக இது உள்ளது.
பல்லடம் நால்ரோடு சிக்னலில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை செல்லும் நெடுஞ்சாலை பிரிகிறது. இந்த இடத்தில், பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தரைமட்ட பாலம் உள்ளது. பொள்ளாச்சி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், நால்ரோடு சிக்னலில், இடது புறம் செல்ல, 'ப்ரீ லெப்ட்' வசதி உள்ளது.
ஆனால், நால் ரோட்டில் உள்ள பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால், இடதுபுறம் திரும்பக்கூடிய வாகனங்கள் போதிய இட வசதியின்றி சிக்னல் விழும் வரை காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பொள்ளாச்சி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, நால்ரோட்டில் உள்ள பாலத்தை விரிவுபடுத்துவதுடன், உயர்த்தி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது, நீண்ட நாட்களுக்குப் பின், தரைமட்ட பாலம் விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியுள்ளது.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'தரைமட்ட பாலத்தை விரிவுபடுத்த டெண்டர் விட்டு இரண்டு மாதம் ஆகிறது. தேர்தல் காரணமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது துவங்கி உள்ளது. ஏற்கனவே உள்ள, 12 மீ., அகலம் உள்ள பாலம், 1.40 கோடி ரூபாய் மதிப்பில், 30 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இத்துடன், 1.5 மீ., உள்ள பாலத்தின் உயரம் 2 மீட்டராக உயர்த்தப்பட உள்ளது. இரண்டு மாதத்துக்குள் பணிகள் முடிய வாய்ப்பு உள்ளது,' என்றனர்.

