/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.எஸ்.டி., வழக்கு நிலுவைக்கு வழி
/
ஜி.எஸ்.டி., வழக்கு நிலுவைக்கு வழி
ADDED : ஜூன் 18, 2024 12:19 AM
திருப்பூர்:ஜி.எஸ்.டி., வழக்கு நிலுவையை சரிசெய்ய, புதிய சமாதான் திட்டத்தை அறிவிக்க வேண்டுமென, பல்வேறு தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார்துரைசாமி கூறியதாவது:
ஜி.எஸ்.டி., அடிக்கடி மாற்றம் செய்யப்படுகிறது; புதிய மறுசீரமைப்பு தொடர்பாக, தொழில்துறையினருக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்படுதில்லை. ஒவ்வொரு பிரச்னை ஏற்படும் போது, தேவையான மறுசீரமைப்பு செய்கின்றனர்.
அதுதொடர்பான வழிகாட்டுதல் இருந்தால், பின்பற்ற ஏதுவாக இருக்கும். இதுவரை, நுாற்றுக்கணக்கான மாற்றங்கள் செய்யப்பட்டது. பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால், வரித்தாக்கலில் குளறுபடி ஏற்படுகிறது.
இந்நிலையில், அபராதத்துடன் வரியை திரும்ப செலுத்தக்கோரி, மத்திய, மாநிலஜி.எஸ்.டி., அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அபராதத்துடன் வரியை செலுத்துவது, இயலாத காரியம். எனவே, மத்திய அரசு, புதிய சமாதான் திட்டத்தை அறிவித்து, ஜி.எஸ்.டி., வழக்குகளை தீர்த்து வைக்க வேண்டும்.
மொத்த நிலுவையில், 25 சதவீத தொகையை, ஒரே தவணையில் பெற்றுக்கொண்ட, சமாதான் திட்டம் வாயிலாக நிலுவைக்கு தீர்வு வழங்க வேண்டும். இல்லாதபட்சத்தில், வரிசெலுத்த முடியாதவர் கோர்ட் டுக்கு செல்வர்; வழக்குகள் அதிக நாட்கள் நிலுவையில் இருக்கும்; பிரச்னைக்கும் தீர்வு கிடைக்க தாமதம் ஏற்படும்.
எனவே, மத்திய அரசு பரிசீலித்து, புதியஜி.எஸ்.டி., சமாதான் திட்டத்தை வரும் மாதங்களில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
கடந்த, 2017ம் ஆண்டு, சரக்கு மற்றும் சேவை வரி என்ற பெயரில், ஜி.எஸ்.டி., அறிவிக்கப்பட்டது. மத்திய, மாநில சரக்கு மற்றும் சேவை வரி துறை, ஒவ்வொரு மாதமும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, முறையற்ற வரித்தாக்கல் தொடர்பான நோட்டீஸ் வழங்கி வருகிறது.
வரி கணக்கீட்டில் குளறுபடி இருப்பதால், அபராதத்துடன் புதிய வரியை செலுத்த வேண்டுமென, நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும், பல்வேறு தொழில்களை சேர்ந்தவர்கள், புதிய வரிவிதிப்பில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் குழம்பிபோயுள்ளனர்.ஜி.எஸ்.டி., வழங்கியுள்ள நோட்டீஸ் மீது விரைந்து தீர்வு வழங்க ஏதுவாக, சமாதான் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.