அவிநாசி:அவிநாசி பகுதியில், நேற்று மாலை பலத்த மழை பெய்தது. திருமுருகன் பூண்டி, சேவூர், பெருமாநல்லுார், தெக்கலுார், அவிநாசி கைகாட்டிப்புதுார், சூளை, பழங்கரை, ஆட்டையாம்பாளையம், காசிக்கவுண்டன்புதுார், அணைப்புதுார் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. பழங்கரை ஊராட்சியில் பச்சாம்பாளையம் பகுதியில் 50 ஆண்டு பழமையான மரம் வேருடன் சாய்ந்தது.
பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.
அவிநாசி சூளை பகுதியில் முறையான வடிகால் சாக்கடை கால்வாய் இல்லாததால் அவிநாசி - சேவூர் ரோட்டில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். வேலாயுதம்பாளையம் ஊராட்சியில், துரைசாமி என்பவருக்கு சொந்தமான கருக்கங்காடு தோட்டத்தில்,ின்னல் தாக்கி ஐந்து தென்னை மரங்கள் தீப்பிடித்து கருகியது.
---
பவர்டேபிள்கள் ஸ்டிரைக்
திருப்பூர், ஆக. 20-
கூலி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து, பவர்டேபிள் சங்கத்தினர் சரக்கு டெலிவரியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில், ஏராளமான உள்நாட்டு பனியன் விற்பனைக்கான நிறுவனங்கள் உள்ளன. அவை, 'ஜாப் ஒர்க்' முறையில், 'பவர்டேபிள்' எனப்படும், நிறுவனத்திடம் துணியை வழங்கி, பனியன் மற்றும் ஜட்டி ரகங்கள் தைத்து பெறுகின்றனர்.
பவர்டேபிள் நிறுவனங்களுக்கு, நான்கு ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த, 2022 ஒப்பந்தப்படி, 2024 ஜூன் 6 முதல், நடைமுறை கூலியில் இருந்து, 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும்.
ஆனால், 'ஒப்பந்த தேதி முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், சில பெரிய நிறுவனங்கள், கூலி உயர்வை வழங்காமல் உள்ளன' என, பவர் டேபிள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர். இதன் தொடர்ச்சியாக, கடந்த, 14ம் தேதி பவர்டேபிள் சங்கத்தின் மகாசபை கூடியது.
'வரும், 19ம் தேதிக்குள் கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கண்டு, கூலி உயர்வு வழங்க வேண்டும்' என, வலியுறுத்தினர்; தவறும்பட்சத்தில், வரும், 19ம் தேதி 'டெலிவரி' செய்வது நிறுத்தி வைக்கப்படும் எனவும் அறிவித்தனர்.
பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலையில், நேற்று, பவர்டேபிள் நிறுவனத்தினர் சரக்கு டெலிவரி மற்றும் கட்டு எடுப்பதை நிறுத்தினர். இதனால், சரக்குகள் தேங்கி வருகின்றன. பிரச்னைக்கு தொடர்ந்து தீர்வு கிடைக்காத பட்சத்தில், அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது என, பவர்டேபிள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
---
கனமழை; மாநகரம் ஸ்தம்பித்தது
திருப்பூர், ஆக. 20-
திருப்பூரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது; தாழ்வான பகுதியில், மழைநீர் புகுந்தது; போக்குவரத்து முடங்கியது.
திருப்பூரில் காலை முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், நேற்று மதியம் கருமேககூட்டங்கள் திரண்டு, மழை துவங்கியது. சூறைக்காற்றுடன் மழை கொட்ட ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்த நிலையில், காற்றின் வேகம் குறையாததால், கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகன ஓட்டிகளும் பயணிக்க முடியாமல் ஸ்தம்பித்தனர்.
தாழ்வான பகுதிகளில், ஒன்றரையடிக்கும் மேலாக மழைநீர் புகுந்தது. ஈஸ்வரன் கோவில் பாலம், ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது. மின்வெட்டு ஏற்பட்டது. மாலை 4:00 மணிக்கு மழை துவங்கிய நிலையில், மழை நின்று, இயல்புக்கு திரும்ப, இரவு, 7:00 மணிக்கு மேலும் தொடர்ந்தது.
பெருக்கெடுத்த கழிவுநீர்
திருப்பூர் புது மார்க்கெட் வீதி. கால்வாய் அடைப்பு மாதக்கணக்கில், சரிசெய்யப்படவில்லை. மழைநீர், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், பாதாள சாக்கடை மூடியை உடைத்துக் கொண்டு, கழிவுநீர் வெளியேறி, ஊற்றெடுத்து, ஆறு போல் ஓடியது. பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் பஸ்கள் தடுமாறி கழிவுநீரை கடந்து சென்றன.
தென்னை மரத்தில் இடி
திருப்பூர், காலேஜ் ரோடு, 15 வேலம்பாளையம் - கணியாம்பூண்டி வழியில் உள்ளது, பாரதிநகர் ஸ்டாப். இங்கு தென்னந்தோப்பில் ஒரு மரத்தில் மழை பெய்த போது அதிக சத்தத்துடன் இடி விழுந்தது. இடி விழுந்ததால், மழை பெய்து கொண்டிருக்கும் போது, பச்சை மரத்தில், தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
பி.என்.,ரோடு ஸ்தம்பிப்பு
திருப்பூர் பி.என்., ரோடு, பிச்சம்பாளையம் சிக்னல் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, 1.5 கி.மீ., துாரத்துக்கு மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நின்று, ஆறு போல் ஓடியது. கார், ஆட்டோ, இலகு ரக வாகனங்கள் செல்லவே முடியவில்லை. ஓரிரு இடங்களில் தண்ணீர் மூன்றடிக்கும் மேல் இருந்ததால், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள் மிதந்து, சாய்ந்தன. பஸ்களில் சக்கரம், படிக்கட்டு மூழ்கும் வரை மழைநீர் ஓடியதால், பஸ்கள் தடுமாறி பயணித்தன. போக்குவரத்து நெரிசலால், மூன்று கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் தேங்கி நின்றன.
நெசவாளர் காலனி, வடக்கு உழவர் சந்தை அருகேயுள்ள குடியிருப்பு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
---
வெள்ளத் தடுப்புச்சுவர் சர்ச்சை
அவிநாசி, ஆக. 20-
அவிநாசி, செம்பியநல்லுார் சாய்கார்டன் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ள தடுப்புச்சுவர் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி, செம்பியநல்லுார் ஊராட்சிக்குட்பட்டு, ஸ்ரீ சாய்கார்டன் வீட்டுமனையில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், அவிநாசி தாசில்தார் மோகனனிடம் மனு வழங்கிய பின், கூறியதாவது:
சாய் கார்டன் குடியிருப்பு பகுதியில், 35க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மழையின் போது வேட்டுவபாளையம், அ.குரும்பபாளையம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், இக்குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடும். குடியிருப்புவாசிகளின் கோரிக்கையை ஏற்று, 'புரமோட்டர்' வாயிலாக வீட்டுமனையிடத்தை சுற்றி, 3 அடி உயரத்துக்கு கான்கிரீட் தடுப்பு அமைத்து, மழை வெள்ளம் உள்ளே புகாதபடி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், 'ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட பாதையில் தான் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது' எனக்கூறி, அருகேயுள்ள உள்ள நில உரிமையாளர்கள், 'அந்த வெள்ள தடுப்புச்சுவரை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்; அதை வழித்தடமாக அனுமதிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை, தாசில்தாரிடம் முன்வைத்தனர்; அதையேற்று, ஒரு வாரத்துக்கு முன், வருவாய்த் துறையினர் அறிவுறுத்தலில், வீட்டுமனையிட 'புரமோட்டர்' வாயிலாகவே அந்த தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது.
இருப்பினும், குடியிருப்புவாசிகள் சார்பில், மீண்டும் அங்கு தடுப்புச்சுவர் கட்டினர்.'அதே பாதையை தான் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்' என, அருகேயுள்ள நில உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
குடியிருப்புமனையிடம், தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதால், தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டால், மழை வெள்ள பாதிப்புகளை, எதிர்கொள்ள நேரிடும். எனவே, தடுப்புச்சுவர் இடிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்; மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்; அதற்கான வாய்ப்பும் அந்த இடத்தில் இருக்கிறது என வலியுறுத்தியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். 21ம் தேதி இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சு நடத்தப்படும் என, தாசில்தார் கூறினார்.
--
கார் விபத்து
ஒருவர் பலி
பொங்கலுார், ஆக. 20-
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு முல்லை நகரைச் சேர்ந்தவர் சதீஷ், 42. நேற்று காலை திருச்செங்கோட்டில் இருந்து பொள்ளாச்சி நோக்கி காரில் சென்றார்.
பொங்கலுார் மின் வாரிய அலுவலகம் அருகே சென்ற போது, கேரளாவில் இருந்து காங்கயம் நோக்கி மரப்பலகை ஏற்றிச் சென்ற லாரியின் பின் சக்கரத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் சக்கரம் கழன்று ஓடியதால் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. காரை ஓட்டி வந்த சதீஷ் பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த லாரி டிரைவர் அஜய்,29 பலத்த காயத்துடன் பல்லடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
-----
ரேஷனில் தே.எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தல்
பல்லடம், ஆக. 20--
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில், ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்துகிறோம். பல லட்சம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல், கருத்து கேட்பு நடத்துவதாக தமிழக அரசு அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. கருத்து கேட்பு என்ற பெயரில் தமிழக அரசு கண்காணிப்பு நாடகம் நடத்தி வருகிறது.
இன்று அனைத்து குடும்பங்களிலும் தேங்காய் எண்ணெய் அவசியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசே ரேஷன் கடை மூலம் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கும் போது, பொதுமக்கள் சந்தோஷத்துடன் அதை வாங்கி செல்வர். முதல் கட்டமாக மூன்று மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை தலா ஒரு லிட்டர் வீதம் ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசு வினியோகிக்க வேண்டும்.
---
குறைகேட்பு கூட்டம்
திருப்பூர், ஆக. 20-
மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மக்களிடமிருந்து மொத்தம் 752 மனுக்கள் பெறப்பட்டன.
பட்டா இடம் ஆக்கிரமிப்பு?
அவிநாசி தாலுகா, காளிபாளையத்தில், 18 ஆண்டுகளுக்கு முன்பு, பட்டியலின மக்கள் 27 பயனாளிகளுக்கு தலா 2 சென்ட் வீதம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தை தனியார் கம்பிவேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாகவும்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வீட்டுமனை பட்டா பெற்ற மக்கள், கருப்பு துணியால் கண்களை கட்டியவாறு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்; கலெக்டரிடம் மனு அளித்தனர்.
வயநாடுக்காக நிதி
திருப்பூர் வாவிபாளையம் அரசு பள்ளி மாணவியர், வயநாடு நிலச்சரிவில் பாதித்த மக்களுக்காக திரட்டிய நிதியை, குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.
மினி பஸ்கள் நிறுத்தம்
பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் அளித்த மனு:
பல்லடம் நகரின் மத்தியில் அமைந்துள்ள பச்சாபாளையம் பகுதியில் இயங்கிய மினிபஸ்கள், சமீபகாலமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அரசு பள்ளி மாணவ, மாணவியர், பெண்கள், தொழிலாளர்கள் பஸ் வசதியின்றி பரிதவிக்கின்றனர். பல்லடம் பஸ் ஸ்டாண்ட் வரை, ஆட்டோக்களில், 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். மினிபஸ் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அனுமதி கூடாது
குன்னத்துார் பகுதி அனைத்து கட்சியினர் அளித்த மனு:
ஊத்துக்குளி தாலுகா குன்னத்துார் பேரூராட்சி 10வது வார்டில், தனியார் மன மகிழ் மன்றம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. குடியிருப்பு, பள்ளி, கோவில் அமைந்துள்ள பகுதியில், மன மகிழ் மன்றம் அமைத்தால், மக்களுக்கு இடையூறு ஏற்படும்; அனுமதி அளிக்கக்கூடாது.
இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளித்தனர்.
மனுக்களுக்கு பதில் இல்லை
சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை அளித்த மனு:
மக்கள் அடிப்படை பிரச்னைகள் சார்ந்து கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்ட கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது, துறை சார்ந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; மனுவுக்கு பதில் கூட அளிப்பதில்லை.
மனுக்களுக்கு, 15 நாட்களுக்குள் துறை சார்ந்த அலுவலர்கள் பதிலளிக்க, கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
----
அரசு கட்டடத்தில் விதிமீறல்?
திருப்பூர், ஆக. 20-
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிய கட்டடத்தில் செயல்படுகிறது. பழைய அலுவலக கட்டடம் மூன்றாண்டு ஒப்பந்த அடிப்படையில், வாடகைக்கு ஏலம் விடப்பட்டது. இங்கு தற்போது பெரிய அளவிலான ரெஸ்டாரன்ட் செயல்படுகிறது.
''இங்கு ஒப்பந்த விதிகளுக்குப் புறம்பாக கட்டடத்தில் மாற்றங்கள் செய்தும் அரசு சின்னங்கள் அகற்றப்பட்டும், சுற்றுச் சுவர் இடித்தும் பணிகள் நடந்துள்ளன; ஒப்படைக்கப்பட்ட பரப்பைக் காட்டிலும் கூடுதல் பரப்பை ஏலம் எடுத்தவர் பயன்படுத்துகிறார்' என்று ஒன்றிய கவுன்சிலர்கள் பி.டி.ஓ.,விடம் புகார் தெரிவித்தனர்.
ஏலம் எடுத்தவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், ஒன்றிய பொறியாளர் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு விதிமீறல்கள் இருப்பின் அது குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
---
மூதாட்டி மனு
திருப்பூர், ஆக. 20-
பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மாராத்தாள், 95; கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு, மகள்களுடன் வந்த மூதாட்டி மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், ''எனக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மகன் இறந்துவிட்டார். பல்லடம் கரடிவாவியில், எனது கணவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் இருந்தது.
நான் உயிருடன் உள்ள நிலையில், இறந்துவிட்டதாக போலி சான்று பெற்று, உறவினர்கள் அந்த நிலத்தை முறைகேடாக தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர். போலி இறப்புச்சான்று வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பூர்வீக சொத்தில், எனது குழந்தைகளுக்குச் சேரவேண்டிய பங்கை மீட்டுத்தரவேண்டும்'' என்று கூறியுள்ளார்.
---
சாமளாபுரம் உப மின் கோட்டம் உருவாக்கம்
திருப்பூர், ஆக. 20-
மின் வாரியத்தில் கோவை தெற்கு மின் பகிர்மான வட்டம், சோமனுார் கோட்டத்தில் மங்கலம் உப கோட்டம் உள்ளிட்ட பகுதிகள் செயல்பட்டு வந்தன. அப்பகுதிகள், பல்லடம் மின் பகிர்மான வட்டம், பல்லடம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டன. மங்கலம், வஞ்சிபாளையம் பிரிவு அலுவலகங்கள், அவிநாசி கோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மங்கலத்தில் இயங்கி வந்த, உபகோட்டம் கலைக்கப்பட்டது. அக்ரஹாரப் புத்துார், பரமசிவம்பாளையம், கோம்பக்காடு, சாமளாபுரம், அய்யன்கோவில் ஆகிய பிரிவு அலுவலகங்கள் பல்லடத்துடன் இணைக்கப்பட்டன.
மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' பல்லடம் கோட்டத்தில், சாமளாபுரம் உபகோட்ட அலுவலகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரிவு அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, சாமளாபுரம் உப கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மின் நுகர்வோர், தங்கள் பகுதிக்கு உரிய அலுவலகங்களில் மின் வாரியம் தொடர்பான சேவைகளுக்கு அணுகலாம்,'' என்று தெரிவித்துள்ளார்.
-----
மகளிர் உரிமைத்தொகை
விண்ணப்பம் குவிந்தது
திருப்பூர், ஆக. 20-
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை கோரும் விண்ணப்பங்களுடன் ஏராளமான பெண்கள் திரண்டனர். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 752 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 300க்கும் மேல், மகளிர் உரிமைத்தொகை மனுக்கள்.
வழக்கமாக பொதுமக்களிடமிருந்து, 500 மனுக்களே பெறப்படும். உரிமைத்தொகை கோரும் விண்ணப்பங்கள் அதிகரிப்பால், மனுக்களை ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்து பதிவு செய்ய அலுவலர்கள் திணறினர். கடந்த 17ம் தேதி மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெற முகாம் நடப்பதாக பரவிய வதந்தியை நம்பி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் கூறுகையில், ''அரசு வகுத்துள்ள தகுதிகள் இருந்தும் கூட, எங்களை மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. நியாயமான கோரிக்கையை, அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும்வகையில் தற்போது மனு அளித்துள்ளோம்' என்றனர்.
---
சிறப்பு பூஜை
திருப்பூர், ஆக. 20-சோமவார பவுர்ணமி முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜை நடந்தது.ஆவணி மாதம், சோமவார பவுர்ணமியான நேற்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை ஆகியன நடந்தது.ஜீவா காலனி, மாகாளியம்மன் கோவிலில், இதையொட்டி ஸ்ரீசர்வேஸ்வரருக்கு ருத்ர ேஹாமம், ருத்ர அபிேஷகம் மற்றும் 108 சங்காபிேஷகம் நடைபெற்றது,தொடர்ந்து அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியனவும் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இச்சிறப்பு வழிபாடு மற்றும் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
---
குறுமைய போட்டி
திருப்பூர், ஆக. 20-
தெற்கு குறுமைய பால்பேட்மின்டன் போட்டி, காங்கயம் ரோடு, ஜெய் நகர், வித்யவிகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
பதினான்கு வயது பிரிவு இறுதி போட்டியில், கருப்பகவுண்டம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி, 2-0 என்ற செட் கணக்கில், வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி அணியை வென்றது.
பதினேழு வயது பிரிவில், வித்யவிகாசினி பள்ளி, 2 - 0 என்ற செட் கணக்கில், கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி அணியை வென்று காட்டியது.
மாணவியர், 14 வயது பிரிவில், கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி முதலிடம், வித்யவிகாசினி 2வது இடம், 17 வயது பிரிவில், வித்யவிகாசினி முதலிடத்தை தட்டி துாக்கியது. கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி 2வது இடம் பெற்றது. பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி அணியை, 19 வயது பிரிவில் எதிர்கொண்ட வித்ய விகாசினி அணி, 2-0 என்ற செட் கணக்கில் வென்றது.
ஜெய்வாபாய் அசத்தல்
வடக்கு குறுமைய மாணவியர் கபடி போட்டி, 14 மற்றும், 17 வயது பிரிவில், 14 அணிகளும், 19 வயது பிரிவில், ஆறு அணிகள் பங்கேற்றன. 14 வயது பிரிவில் வி.கே., அய்யங்காளி பாளையம் பள்ளி அணி, 23 - 16 என, ஜெய்வாபாய் பள்ளி அணியை வென்றது.
19 வயது பிரிவில், போட்டி துவங்கியது முதலே அதிரடி காட்டிய ஜெய்வாபாய் பள்ளி அணி, 20 - 12 என்ற புள்ளிக்கணக்கில், வி.கே., அய்யங்காளிபாளையம் அரசு பள்ளி அணியை வென்று காட்டியது. 17 வயது பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி அணி 21 - 19 என்ற புள்ளிக்கணக்கில் பூலுவபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை வென்றது.
கால்பந்து ஒத்திவைப்பு
திருப்பூர், கணியாம்பூண்டி, மைக்ரோ கிட்ஸ் பள்ளியில், திருப்பூர் வடக்கு குறுமைய, 17 வயது, மாணவர் கால்பந்து போட்டியில், 13 அணிகள் பங்கேற்றன.
லீக் முடிந்து, காலிறுதி சுற்றுகள் நடந்த வந்த நிலையில், மழை குறுக்கிட்டதால், அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள், வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பூர், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், தெற்கு குறுமைய பதினான்கு வயது பிரிவு கால்பந்து போட்டி நடந்தது.
14 அணிகள் பதிவு செய்து விளையாடின; மழையால் இறுதி போட்டி வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
---
என்.எஸ்.பி., மணிமண்டபம் திறப்பு நாள்
அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தல்
பல்லடம், ஆக. 20--
''என்.எஸ்.பழனிசாமி மணிமண்டபம் திறப்பு விழா நாளை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும்'' என்று, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் வெற்றி வலியுறுத்தினார்.
பல்லடம் அடுத்த, கள்ளிப்பாளையம் ஊராட்சி நாதகவுண்டம்பாளையம் கிராமத்தில், முன்னாள் விவசாய சங்க தலைவர் என்.எஸ்.பழனிசாமியின் நினைவு மண்டப திறப்பு விழா நடந்தது. முன்னாள் முதல்வர் பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் செங்கோட்டையன், வேலுமணி, ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன், ஆனந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் வெற்றி பேசியதாவது:
விவசாயிகளின், 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு --அவிநாசி திட்டம் மூலம் எண்ணற்ற விவசாயிகளின் வாழ்வா தாரம் மேம்படும்.
இதேபோல், ஆனைமலை -- நல்லாறு திட்டத்தையும் நிறைவேற்றி தர வேண்டியது பி.ஏ.பி., விவசாயிகளுக்கு மிகவும் முக்கியம். விவசாயிகள் தரப்பில் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை என்னவென்றால், மணிமண்டப திறப்பு விழா மற்றும் என்.எஸ்.பழனிசாமி பிறந்த நாள் விழா நாளை (ஆக.,18) அரசு விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத், விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன், காவிரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தனபால் உட்பட ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, மணிமண்டப திறப்பு விழாவை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு, விவசாய சங்கம் சார்பில் நாட்டு பசுங்கன்றுக்குட்டி பரிசாக வழங்கப்பட்டது.