/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹலோ... ஆபீஸ்ல யாராவது இருக்கீங்களா!
/
ஹலோ... ஆபீஸ்ல யாராவது இருக்கீங்களா!
ADDED : ஜூலை 12, 2024 12:24 AM

பல்லடம் : பல்லடம், கோவை - திருச்சி ரோடு, செட்டிபாளையம் பிரிவு அருகே, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
நகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினர் உள்ளிட்ட பலரும், மின் கட்டணம் செலுத்தவும், மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், புகார்கள், குறைகளை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மின்வாரிய அலுவலகத்தை நாடுகின்றனர்.
நேற்று காலை, வழக்கம் போல் மின்வாரிய அலுவலகம் திறக்கப்பட்டு இருந்தது. ஆனால், காலை, 11.00 மணியாகியும் அலுவலகத்தில் உதவியாளர், செக்யூரிட்டி உட்பட யாருமே இல்லை. நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் இந்த அலுவலகத்தின் மூலம் மின் கட்டணத்தை செலுத்தி வரும் நிலையில், நேற்று காலை, மின் கட்டணம் செலுத்த வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மின் வாரிய அலுவலர் ஒருவரிடம் கேட்டதற்கு, 'கூடுதல் பொறுப்புடன் உதவி செயற்பொறியாளர் ஒருவர் இங்கு நியமிக்கப்பட்டுள்ளார். மின் கட்டணம் வசூலிப்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விடுப்பில் உள்ளார். இதற்கு மாற்றாக, அலுவலகத்தில் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
நகரப் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் என்பதால், அதிகப்படியான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். எனவே, இங்கு ஊழியரே இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் தேவையற்ற அலைச்சலுக்கு ஆளாவர். கூடுதல் ஆட்களை நியமித்து பணிகள் தடையின்றி நடக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

