/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறு தானிய சாகுபடியில் அதிக வருவாய் விவசாயிகளுக்கு அழைப்பு
/
சிறு தானிய சாகுபடியில் அதிக வருவாய் விவசாயிகளுக்கு அழைப்பு
சிறு தானிய சாகுபடியில் அதிக வருவாய் விவசாயிகளுக்கு அழைப்பு
சிறு தானிய சாகுபடியில் அதிக வருவாய் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 16, 2024 11:35 PM
உடுமலை;சிறு தானியங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், குறைந்த செலவு, அதிக வருவாய் கிடைக்கும் சிறுதானிய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும், என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள குரல்குட்டையில், வேளாண் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், கிராம விவசாயிகள் முன்னேற்றக்குழு அமைப்பு மற்றும் அட்மா திட்டத்தில், விவசாயிகளுக்கான சிறுதானியப்பயிர்கள் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி தலைமை வகித்தார். திட்டத்தின் பொறுப்பு அலுவலர், உதவி வேளாண் அலுவலர் முருகானந்தம், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமாசாலினி மற்றும் வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினர்.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரிசு நிலத்தை சாகுபடிக்கு ஏற்ற நிலமாக மாற்ற மானியம் வழங்கப்படுகிறது.
வரப்பு ஓரங்களில், உளுந்து உள்ளிட்ட பயறு வகை சாகுபடிக்கு மானியமும், பயிர்களுக்கு தேவையான இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கான சிறு தானியப் பயிர்கள் உற்பத்தி குறித்து, ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தவப்பிரகாஷ் பேசியதாவது:
பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுவதற்கு முன், நிலங்களில் பசுந்தாள் உர விதைகள் விதைத்து, பூக்கும் பருவமான, 45 வது நாள் மடக்கி உழவு செய்து விட வேண்டும். இது, 10 லாரி லோடு எரு இட்டதற்கு சமமாகும்.
உயிர் உரங்கள் இடும் போது, அதிலுள்ள நுண்ணுயிர்கள் உரச்சத்தை சிதைத்து, பயிர்கள் எடுத்துக்கொள்ளும் சத்துகளாக வழங்குகிறது. அதனால் உயிர் உரம் இட வேண்டும்.
கலப்பு உரங்களை தவிர்த்து, பேரூட்ட உரங்களான யூரியா, சூப்பர், பொட்டாஷ் இட வேண்டும். பயிர்களுக்கு தேவையில்லாத உரங்களை தவிர்க்க வேண்டும்.
சிறு தானியப் பயிர்களான கம்பு, ராகி சாகுபடி செய்யும் போது, விவசாயிகளுக்கு செலவு குறைவாகவும், வருமானம் அதிகமாகவும் கிடைக்கிறது.
குறு தானியங்களான சாமை, தினை, வரகு, பனிவரகு போன்ற பயிர்கள், வறட்சியை தாங்கி வளர்வதோடு, சாகுபடி செலவு குறைவாகவும், அதிக வருவாய் தரக்கூடியதாகும். எனவே, விவசாயிகள் சிறுதானியம் சாகுபடி செய்ய முன் வர வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.