/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதுப்பொலிவு பெறும் நெடுஞ்சாலை பாலங்கள் நீர்வழித்தடமும் துார்வாரப்படுகிறது
/
புதுப்பொலிவு பெறும் நெடுஞ்சாலை பாலங்கள் நீர்வழித்தடமும் துார்வாரப்படுகிறது
புதுப்பொலிவு பெறும் நெடுஞ்சாலை பாலங்கள் நீர்வழித்தடமும் துார்வாரப்படுகிறது
புதுப்பொலிவு பெறும் நெடுஞ்சாலை பாலங்கள் நீர்வழித்தடமும் துார்வாரப்படுகிறது
ADDED : ஆக 13, 2024 01:39 AM

உடுமலை;பருவமழைக்கு முன், உடுமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாலங்களின், அருகில் நீர்வழிப்பாதையை துார்வாரி, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையின் கீழ், உடுமலை - பல்லடம், பொள்ளாச்சி - தாராபுரம் (ஒரு பகுதி), மாநில நெடுஞ்சாலைகளும், மாவட்ட முக்கிய, இதர ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரோடுகளில், மழை நீர் ஓடைகளின் குறுக்கே, மிகச்சிறிய பாலங்கள், 1,045; சிறிய பாலங்கள் 63 மற்றும் 20 பெரிய பாலங்கள் உள்ளன.
இந்த பாலங்களின் இருபுறங்களிலும் உள்ள நீர் வழிப்பாதைகள் புதர் மண்டி, மண் மேடாக மாறி விடுவதால், மழைக்காலங்களில், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, மழை நீர் வெளியேற வழியில்லாமல், ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, போக்குவரத்து பாதிக்கிறது; ரோடும் அரிக்கப்பட்டு, குண்டும், குழியுமாக மாறி விடுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, வடகிழக்கு பருவமழைக்கு முன் பாலங்களை பராமரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, உடுமலை உட்கோட்டத்தில், தற்போது பராமரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
பாலத்தின் இருபுறங்களிலும், நீர் வழிப்பாதையிலுள்ள, மண் மேடுகளை அகற்றி, துார்வாரி, பாலங்களுக்கு வெள்ளையடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதனால், நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலங்கள் புதுப்பொலிவு பெற்று வருகிறது.
பருவமழைக்கு முன், அனைத்து பாலங்களிலும் பராமரிப்பு பணிகள் நிறைவு பெறும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
'ப்ளட் கேஜ்' தேவை
அதிக போக்குவரத்து இல்லாத கிராமப்புற ரோடுகளில், சிறு பாலங்கள் அதிகளவு உள்ளன. இந்த பாலங்களில், மழைக்காலங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
அப்போது, வெள்ளம் பாய்ந்து செல்லும் உயரத்தை அளவீடு செய்யும் வகையில், பாலங்களில், 'ப்ளட் கேஜ்' அமைப்பது வழக்கம். இதனால், எத்தனை அடிக்கு தண்ணீர் செல்கிறது என வாகன ஓட்டுநர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
அதிக உயரத்துக்கு தண்ணீர் சென்றால், பாலத்தை கடக்காமல், எச்சரிக்கையாக நின்று கொள்ளலாம். இந்த அமைப்பு பல பாலங்களில் பராமரிப்பின்றி மாயமாகி விட்டது. இது குறித்து ஆய்வு செய்து, 'ப்ளட் கேஜ்' அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.