sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாசன மேலாண்மை சீராக்கினால் பி.ஏ.பி., திட்டம் சிறக்கும் தமிழக அரசு கண்காணிப்பு குளறுபடி திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் பேட்டி

/

பாசன மேலாண்மை சீராக்கினால் பி.ஏ.பி., திட்டம் சிறக்கும் தமிழக அரசு கண்காணிப்பு குளறுபடி திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் பேட்டி

பாசன மேலாண்மை சீராக்கினால் பி.ஏ.பி., திட்டம் சிறக்கும் தமிழக அரசு கண்காணிப்பு குளறுபடி திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் பேட்டி

பாசன மேலாண்மை சீராக்கினால் பி.ஏ.பி., திட்டம் சிறக்கும் தமிழக அரசு கண்காணிப்பு குளறுபடி திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் பேட்டி


ADDED : செப் 01, 2024 02:21 AM

Google News

ADDED : செப் 01, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் பிரதான நீர் பாசன ஆதாரமாக பி.ஏ.பி., எனப்படும் 'பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்' இருந்து வருகிறது. இதன் வாயிலாக, 4.25 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.

ஆழியாறு, திருமூர்த்தி அணைகளில் துவங்கி கடைமடை வரை, 2,000 கி.மீ துாரத்துக்கு வாய்க்கால்கள் உள்ளன. இருப்பினும், இந்தப் பாசன திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி, போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பி.ஏ.பி., திட்டத்தில் நிலவும் குறைபாடு, அதற்கான தீர்வுகள் குறித்து, தமிழ்நாடு திட்டக்குழு நீர் மேலாண்மை முன்னாள் உறுப்பினர் திவ்யார் நாகராஜன் கூறியதாவது:

தமிழக முதல்வராக காமராஜர் இருந்த காலத்தில், கோவை மாவட்டத்தில் நிலவிய வறட்சியை போக்கும் நோக்கில், பி.ஏ.பி., பாசன திட்டத்தை நிறைவேற்றினார். இத்திட்டத்தின் கட்டமைப்பு 'பொறியியல் விந்தை' எனப்படுகிறது.

தமிழக - கேரள அரசுகளுக்கு இடையேயான நீர் பங்கீடு ஒப்பந்தப்படி, இத்திட்டம் வாயிலாக பெறப்படும், 51.5 டி.எம்.சி., நீரில், கேரளாவுக்கு, 21, தமிழகத்துக்கு, 30.50 டி.எம்.சி., நீர் பங்கிடப்படுகிறது. 2016 - 17 தவிர, மற்ற ஆண்டுகளிலும், கேரளாவுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவில், 75 சதவீதத்துக்கு குறைவில்லாமல், தமிழகம் வழங்கி இருக்கிறது.

பங்கீடு குளறுபடி


ஆனால், 2023 - 24 ஆண்டு ஏப்., 30 வரை, 31.27 டி.எம்.சி., நீர் தான் வந்துள்ளது. இதில், கேரளாவுக்கு, 18.38 டி.எம்.சி., அதாவது, 58.7 சதவீதம், தமிழகத்துக்கு, 12.89 டி.எம்.சி., அதாவது, 41.2 சதவீதம் நீர் பங்கிடப்பட்டுள்ளது.

தண்ணீர் தேவை அதிகமுள்ள தமிழகத்துக்கு, குறைந்தளவு தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. முழுமையாக நீர் கிடைக்கும் ஆண்டுகளில், கேரளாவுக்கான பங்கு, 40 சதவீதம்; தமிழகத்திற்கான பங்கு, 60 சதவீதமாக உள்ளது.

வறட்சி காலங்களில் நீரை எப்படி பங்கிடுவது என, ஒப்பந்தத்தில் குறிப்பிடாததால், கேரளாவிற்கு அதிகளவு நீர் கொடுத்து விடுகிறோம். ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் போது, இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 60 ஆண்டுகளில், நமக்கு கிடைக்கும் நீரை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்பது யதார்த்தம்.

முழுமையடையாத நீர் வினியோகம்


தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய, 30.5 டி.எம்.சி., நீரில், ஆழியாறு பழைய, புது ஆயக்கட்டு பாசனத்துக்கு, 4.50 டி.எம்.சி., தண்ணீர் போக எஞ்சிய, 25.5 டி.எம்.சி., நீர், கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து பாசனத்துக்கு திறந்து விடப்படுகிறது.

மொத்தம், 1,000 கன அடி கொள்ளளவு கொண்ட கான்டூர் கால்வாயின் இருபுறமும் கல் கட்டடமாக இருந்த நிலையில் கசிவு போக, திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்வது, 800 கன அடி நீர் தான். 30 நாட்களுக்கு, கான்டூர் கால்வாயில் வரும், 800 கன அடி நீர், 20 நாள் பாசனத்திற்கு, வினாடிக்கு, 1,100 கன அடி வீதம், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் திறந்து விடப்படுகிறது.

அதன்பின், 10 நாட்கள் நீரை தேக்கி வைத்து, ஒரு சுற்றுக்கு, 30 நாள் வீதம், 5 சுற்று தண்ணீர் விட, ஐந்து மாதங்களாகின்றன. அடுத்த மண்டலத்துக்கு, ஐந்து மாதங்கள் என, 10 மாதங்களாகி விடுகின்றன. தற்போது, கான்டூர் கால்வாயின் இடது கரை பகுதி முழுக்க கான்கிரீட் சுவர் கட்டப்பட்டுள்ளதால் கசிவு குறைந்து, 900 கன அடி நீர் வருகிறது.

பல ஆண்டுகளாக, கான்டூர் கால்வாய் பராமரிப்பு என, ஆண்டுக்கு, மூன்று முதல் நான்கு மாதங்கள் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கடந்த, எட்டு மாதத்தில், 16.62 டி.எம்.சி., நீர் தான் கிடைத்துள்ளது.

இதற்கு தீர்வு என்ன?


கால்வாய் பராமரிப்பு பணி முடிந்து, கால்வாயில் நீர் திறந்துவிடும் போது, மழைக்காலம் முடிந்து விடுகிறது. எனவே, ஆண்டுதோறும், மே 1ம் தேதியில் இருந்து கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணி துவக்க வேண்டும். பணியை, ஆறேழு கான்ட்ராக்டர்களுக்கு பங்கிட்டு கொடுத்து, 30 நாளில் பராமரிப்பை முடிக்க வேண்டும்.

ஜூன் 1ல், மழைக்காலம் துவங்கும் போது, கான்டூர் கால்வாயில் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஜூன், 15ல், திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்க வேண்டும். இதனால், அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேறுவதை தவிர்க்க முடியும்.

இந்தாண்டு பராமரிப்பு வேலைகளை பாதியில் நிறுத்தி, கால்வாய்க்குள் இருக்கும் கற்களை வெளியே எடுத்து, ஜூன் முதல் வாரம் நீர் எடுத்திருந்தால், 1,000 கன அடி வீதம், ஒரு மாதத்துக்கு, 2.45 டி.எம்.சி., வீதம், இரு மாதங்களில், 5.50 டி.எம்.சி., நீர் கிடைத்திருக்கும். இதனால், சோலையாற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டதை தவிர்த்திருக்கலாம்.

கண்காணிப்பு இல்லை


பி.ஏ.பி., பாசனத்தில், நதிநீர் ஒப்பந்த விதிப்படி தமிழகம் தண்ணீர் திறந்து விடுகிறதா என்பதை கண்காணிக்க, நான்கு பேர் கொண்ட, ஐந்து குழுக்களை, கேரள அரசு பணியமர்த்தி உள்ளது.

ஆழியாற்றில் இருந்து செல்லும் நீரை, மணக்கடவு எல்லையில் தினமும், ஐந்து முறை கணக்கெடுத்து, அதன் சராசரியை கணக்கிட்டு, நீர் பங்கீடு சரியாக உள்ளதா என்பதையும், அக்., முதல் பிப்., வரை மழை குறைவான, நான்கு மாதங்களில் மேல் நீராறு மற்றும் கீழ் நீராறில் இருந்து இடைமலை ஆற்றிற்கு தண்ணீர் வருகிறதா என்பதையும் கேரள அரசு கண்காணித்து உறுதிப்படுத்துகிறது.

அதேபோல், பரம்பிக்குளம், சோலையாறு நீர் நிலவரத்தையும் கண்காணிக்கின்றனர். கேரள சோலையாறு அணையில், செப்., மற்றும் பிப்., மாதங்களில் அணையை முழு கொள்ளளவிலும், பிற மாதங்களில், 5 அடிக்கு குறையாமலும் வைக்க வேண்டும் என்பது விதி.

இந்த விதிமுறையை கேரள அரசு பின்பற்றுகிறதா என்பதை தமிழக கண்காணிப்பு குழுவினர் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், தமிழக அரசின் சார்பில் ஓர் இளநிலை பொறியாளர் கூட கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை.

இருப்பினும், நதி நீர் ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் செப்., 1 முதல் சோலையாறு முழு கொள்ளளவில் இருப்பதை உறுதி செய்யும் வகையில், நம் நீர்வளத்துறை அதிகாரிகள், கேரள அரசு அதிகாரிகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். இதோடு பணி முடிந்துவிட்டது என கருதாமல், ஆண்டுமுழுக்க கண்காணிப்பு பணி மேற்கொள்ள, நீர்வளத்துறை சார்பில் பொறியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

தினமும், 1,100 - 1,200 கன அடிநீரில், பவர் ஹவுஸ் 2 மற்றும் உபரிநீர் போக்கி வாயிலாக, 446 கன அடி நீர் தமிழக சோலையாற்றில் இருந்து, கேரளா சோலையாற்றுக்கு செல்கிறது. கேரளா சோலையாறு ஏற்கனவே நிரம்பியுள்ள நிலையில், உபரிநீரை அனுப்ப வேண்டிய அவசியமில்லை.

நம் மாநில கண்காணிப்புக் குழுவினர் அங்கு பணியில் இருந்திருந்தால், இந்த விரயம் தவிர்க்கப்பட்டிருக்கும். திறந்து விடப்படும் உபரிநீர், கேரளா, சாலக்குடி ஆறு வழியாக, அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு சென்று அரபிக்கடலில் கலக்கிறது.

திட்டமிடல் இல்லை


கடந்த, ஆக., 25ல் தமிழகம் திறந்துவிட்ட நீர், 1,086 கன அடி; கேரளாவின் நீர் வெளியேற்றம், 1,087 கன அடி. அந்த நீரை கேரளாவுக்கு விடாமல், பரம்பிக்குளத்துக்கு விட்டிருந்தால், முழு கொள்ளளவு 72 அடியை அந்த அணை எட்டியிருக்கும்; சோலையாறும், முழு கொள்ளளவு 160 அடியை நீர் எட்டியிருக்கும். நீர் மேலாண்மையில் திட்டமிடல் இல்லாததையே இது காட்டுகிறது.

கேரளாவுக்கு தண்ணீரை விட மின்சாரம் தான் முக்கிய தேவை. எனவே, சோலையாற்றில் இருந்து கிடைக்கும், 6 டி.எம்.சி., நீரில், 6 கோடி யூனிட் மின் உற்பத்தி, நம்மால் செய்ய முடியும்; அந்த அடிப்படையில் நாம் கேரளாவுக்கு, 6 டி.எம்.சி., நீரை அனுப்பாமல், அதற்கு பதில், 6 கோடி யூனிட் மின்சாரத்தை வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டால், கேரளாவுக்கான மின் தேவை பூர்த்தியடையும்; தமிழகத்திற்கும், உபரிநீர் கிடைக்கும்.

நீராற்றில் இருந்து கேரளாவுக்கு செல்லும், 1.45 டி.எம்.சி., என்பது இடைமலையார் அணை கட்டுவதற்கு முன் போடப்பட்ட ஒப்பந்தம். இப்போது, இடைமலையாற்றின் மீது, கேரள அரசு, 38.5 டி.எம்.சி., அளவில் பெரிய அணை கட்டி விட்டனர். கீழ் நீராற்றில் இருந்து, நாம் வெளியேற்றும் தண்ணீர், 3 - 4 கி.மீ.,லேயே பெரியாறில் சேர்ந்து விடுகிறது.

இந்த நீரால் கேரளாவுக்குபெரிய பலனில்லை. அதே நேரம், அம்மாநிலத்தின் பெரிஞ்சான்குட்டி, துாயன்குட்டி சிற்றாறு வாயிலாக பயன்பெறும் திட்டங்கள், அம்மாநில அரசின் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த திட்டங்கள் நிறைவேறினால், கேரளாவுக்கு தண்ணீர் தேவையிருக்காது. அதையும் நாம் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

சோலையாறு அணையில், செப்., மற்றும் பிப்., மாதத்தில், அணையை முழு கொள்ளளவிலும், பிற மாதங்களில், 5 அடிக்கு குறையாமலும் வைக்க வேண்டும் என்பது விதி. இதை கேரள அரசு பின்பற்றுகிறதா என்பதை தமிழக கண்காணிப்பு குழு உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், தமிழக அரசின் சார்பில் ஓர் இளநிலை பொறியாளர் கூட கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை

கேரளாவுக்கு தண்ணீரை விட மின்சாரம் தான் முக்கிய தேவை. எனவே, சோலையாற்றில் இருந்து கிடைக்கும், 6 டி.எம்.சி., நீரில், 6 கோடி யூனிட் மின் உற்பத்தி, நம்மால் செய்ய முடியும்; அந்த அடிப்படையில் நாம் கேரளாவுக்கு, 6 டி.எம்.சி., நீரை அனுப்பாமல், அதற்கு பதில், 6 கோடி யூனிட் மின்சாரத்தை வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்தால், கேரளாவுக்கான மின் தேவை பூர்த்தியடையும்; நமக்கும் உபரிநீர் கிடைக்கும்






      Dinamalar
      Follow us