/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சக்தி' இருந்தால் 'வானம்' வசப்படும்... பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பெண் 'ட்ரோன் பைலட்'
/
'சக்தி' இருந்தால் 'வானம்' வசப்படும்... பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பெண் 'ட்ரோன் பைலட்'
'சக்தி' இருந்தால் 'வானம்' வசப்படும்... பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பெண் 'ட்ரோன் பைலட்'
'சக்தி' இருந்தால் 'வானம்' வசப்படும்... பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பெண் 'ட்ரோன் பைலட்'
ADDED : செப் 02, 2024 11:32 PM

திருப்பூர்;மத்திய அரசின், 'நமோ ட்ரோன்' திட்டம் வாயிலாக, திருப்பூர் மாவட்டத்திலும் ஒரு பெண், ட்ரோன் பைலட்டாக மாறியுள்ளார்.
கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றும் வகையில், 'நமோ ட்ரோன்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக, நாடு முழுவதும், கிராமப்புற சுய உதவிக்குழு பெண்கள், பயிற்சி பெற்று, 'ட்ரோன்' பைலட்டாக மாறி வருகின்றனர்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், பொங்கலுாரை சேர்ந்த மனோரஞ்சிதம், 35, 'ட்ரோன் பைலட்' பயிற்சி பெற்று, தற்போது, பயிர்களுக்கு மருந்து தெளித்து வருகிறார்.
இது குறித்து, மனோரஞ்சிதம் கூறியதாவது:
எம்.டெக்., படித்துள்ளேன். மத்திய அரசின் 'நமோ ட்ரோன்' திட்டம் குறித்து அறிந்து இணைந்தேன். 'இப்கோ' நிறுவன உதவியுடன் சென்னையில், 15 நாள் 'ட்ரோன்' இயக்கும் பயிற்சி முடித்து, லைசென்ஸ் பெற்றேன்.
அந்நிறுவனமே, ஒப்பந்த அடிப்படையில், 'ட்ரோன்' வழங்கியது. இதன் அடிப்பகுதியில், 10 லி., கொள்ளளவுள்ள டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. 4 மீ., முதல், 15 மீ., உயரம் வரை பறந்து, விவசாய நிலங்களில் மருந்து, திரவநிலை உரங்கள் தெளிக்கலாம்.
நுாறு சதவீத தானியங்கி தொழில் நுட்பம் என்பதால், ஜி.பி.எஸ்.,-ல், நிலத்தின் மொத்த பரப்பளவு, பறக்க வேண்டிய உயரம், மருந்து தெளிக்க வேண்டிய அளவு உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்தால் போதும். மிக துல்லியமாக பறந்து, மருந்து தெளித்து விடும்.
மரங்கள், கம்பிவேலி குறுக்கீடு இருந்தால், 'ட்ரோனை' மேனுவலாக இயக்குவேன். சாதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தில் மருந்து தெளிக்க, ஒரு மணி நேரமாகும். ஒரே சீராக மருந்து தெளிப்பது சவாலானது; மருந்து தெளிப்பவர், பாதிப்பு ஏற்படாதவாறு பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும்.
'ட்ரோன்' வாயிலாக, பத்தே நிமிடத்தில், ஒரு ஏக்கர் நிலத்தில் மருந்து தெளிக்கலாம். துாரத்திலிருந்து இயக்குவதால், மருந்து தெளிப்பது மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது. பயிர்களில் ஒரே சீராக மருந்து தெளிக்கப்படுவதால், பூச்சி, புழுக்களை கட்டுப்படுத்துவதும் எளிதாகிகிறது.
விவசாய வளர்ச்சிக்கு, இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் மிகவும் அவசியம். உலகுக்கெல்லாம் உணவு கொடுக்கும் விவசாயத்துக்கு, 'ட்ரோன்' வாயிலாக, மருந்து தெளிப்பதை பெருமையாக கருதுகிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
---
'ட்ரோன்' பைலட் மனோரஞ்சிதம்.