/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மனுக்களை மதித்தால்தானே... தீர்வு காண முயன்றால்தானே!'
/
'மனுக்களை மதித்தால்தானே... தீர்வு காண முயன்றால்தானே!'
'மனுக்களை மதித்தால்தானே... தீர்வு காண முயன்றால்தானே!'
'மனுக்களை மதித்தால்தானே... தீர்வு காண முயன்றால்தானே!'
ADDED : செப் 17, 2024 05:12 AM

திருப்பூர்: ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் தேக்கம் அடைந்துள்ளது'' என்று கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தின்போது, அலுவலர்கள் மத்தியில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் கார்த்திகேயன் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். மக்கள் அளிக்கும் மனுக்கள் மதிக்கப்படுவதில்லை என்று பல்வேறு அமைப்பினரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காற்றில் பறக்கும் கலெக்டர் உத்த ரவு
சண்முகசுந்தரம், தலைவர், நல்லுார் நுகர்வோர் நலமன்றம்: கலெக்டரிடம் கூறினால், நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்றுதான், நாங்களும் பொதுமக்களுக்கான கோரிக்கையை, கலெக்டரிடம் மனுவாக அளிக்கிறோம். கலெக்டரும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிடுகிறார். ஆனால், அரசுத்துறையினர், கலெக்டர் உத்தரவையே மதிப்பதில்லை; பெரும்பாலான மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும்.
'நிராகரிப்பு' பதில் பாமர மக்கள் தவிப்பு
நஞ்சராயன்குளம் பாதுகாப்பு சங்க தலைவர் கிருஷ்ணசாமி: கலெக்டர் அலுவலகம் மற்றும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டங்களில் அளிக்கும் மனுக்களுக்கு, நடவடிக்கை கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து, கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் பேசியே தீர்வு கிடைப்பதில்லை. பாமர மக்களின் மனுக்கள், பெரும்பாலும், 'நிராகரிப்பு' என்ற பதிலில் முடிந்துவிடுகிறது.
தீர்வு ஓரிடம் மனு வேறிடம்
'கன்ஸ்யூமர் அவேர்னஸ்' அமைப்பு இணை செயலாளர் ரவி: மாநகராட்சி தொடர்பான மனுவை கொடுத்தால், அதை தெற்கு தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி விடுகின்றனர். குடிசைமாற்று வாரியத்துக்கு கொடுத்தால், வீட்டுவசதித்துறைக்கு செல்கிறது. மனுக்களை எங்கே அனுப்பி, தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று கூட, சிலருக்கு தெரிவதில்லை. கட்சி செல்வாக்கு இருந்தால், மனுவுக்கு தீர்வு கிடைக்கிறது.
மனுவுக்கு பதில் தலைகீழ் மாற்றம்
ராமசாமி, விவசாயி, இடுவாய்: கலெக்டரிடம் மனு கொடுத்தால், ஒரு வாரத்துக்குள் ஏதாவது ஒரு பதில் கிடைக்கிறது. மனுவுக்கு உடனே தீர்வு காண முடியாமலும் இருக்கலாம்; அதற்கு சரியான பதிலை கொடுத்தாலே திருப்தியாக இருக்கும். விவசாயிகள் கூட்டத்தில் கொடுக்கும் மனுவுக்கு, அடுத்த மாத கூட்டத்துக்குள், கடிதம் வாயிலாக பதில் அனுப்பும் வழக்கம் இருந்தது. தற்போது தலைகீழாக மாறிவிட்டது; மனுவுக்கு பதில் கிடைப்பதில்லை. மாதாந்திர விவசாயிகள் கூட்டத்தில், பேச வாய்ப்பே கிடைப்பதில்லை.
போராடித்தான் வாழ முடிகிறது
வேலுசாமி, தலைவர், பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை வாய்க்கால் விவசாயிகள் சங்கம்: கலெக்டரிடம் மனு கொடுத்தாலே, உடனடியாக தீர்வு கிடைப்பதில்லை; மற்ற அதிகாரிகள் எப்படி தீர்வு காண முடியும்? மனு கொடுக்கும் விவசாயிகள், தொடர் போராட்டம் நடத்தி கவனத்தை ஈர்த்தால் மட்டுமே, தீர்வு கிடைக்கிறது. விவசாயிகள், தொடர்ந்து போராடியாவது தீர்வு பெற்றால் தான் வாழ முடிகிறது.