/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தலில் நிற்க ஆசைப்பட்டால் தப்பா! களமிறங்கிய சுயேட்சைகள்
/
தேர்தலில் நிற்க ஆசைப்பட்டால் தப்பா! களமிறங்கிய சுயேட்சைகள்
தேர்தலில் நிற்க ஆசைப்பட்டால் தப்பா! களமிறங்கிய சுயேட்சைகள்
தேர்தலில் நிற்க ஆசைப்பட்டால் தப்பா! களமிறங்கிய சுயேட்சைகள்
ADDED : ஏப் 07, 2024 12:22 AM
தேர்தலில் போட்டியிட ஆசையாக இருந்தது; களமிறங்கிவிட்டேன்'' என்று சொல்கிறார், திருப்பூர் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள, சுப்ரமணி, 64. இத்தொகுதியில் களமிறங்கியுள்ள சுயேட்சைகள் குறித்து வாக்காளர்களும் அறிந்துகொள்ள வேண்டும் அல்லவா!
திருப்பூர் லோக்சபா தொகுதியில் 13 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இவர்களில் ஏழு பேர் கட்சி வேட்பாளர்கள்; ஆறு பேர் சுயேட்சைகள்.
''சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நீங்கள், எப்படி பிரசாரம் செய்கிறீர்கள்? ஒரு வேளை நீங்கள்எம்.பி.,யாகி விட்டால் என்ன செய்வீர்கள்?'' என கேள்வி எழுப்பினோம்; அவர்கள் அளித்த பதில்கள்.
டாஸ்மாக் கடைகளை மூடுவேன்
சதீஷ்குமார், 38: ெஹல்மெட் சின்னத்தில் போட்டியிடுகிறேன். அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க நிறுவன தலைவராக உள்ளேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. 'வஞ்சிக்கப்படும் நாடார்கள்' எனும் தலைப்பில், பொதுக்கூட்டங்களை நடத்தினேன்.
கடந்த சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு, ஆயிரம் ஓட்டு வாங்கினேன். தற்போது, நம்பியூர், கோபி, பெருந்துறை, செங்கப்பள்ளி பகுதியில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறேன். நாடார்கள் அதிகமாக வாழ்கிறோம்; அரசியல் அங்கீகாரம் வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
எனக்கு ஆதரவு தெரிவித்து, ஹரிநாடார் பிரசாரம் செய்ய உள்ளார்.எம்.பி.,யானால், கள் இறக்க அனுமதி பெற்றுத்தருவேன்; டாஸ்மாக் கடைகளை மூடுவேன்.
சமூக நீதியை நிலைநாட்டுவேன்
கண்ணன், 38: தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறேன். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி வழங்குவதில், நாடார் சமுதாயத்தை, திராவிட கட்சிகள் புறக்கணிக்கின்றன. குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலில் போட்டியிடுகிறேன். பனை மக்கள் கட்சி மாநில பொது செயலாளராக உள்ளேன். பவானி தொகுதியில் அதிகமாக பிரசாரம் செய்கிறேன். இதற்கு முன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டேன்.
எம்.பி.,யானால், எல்லா சமுதாயத்துக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடுவேன். சமூக நீதியை நிலைநாட்டுவேன்.
வேலைவாய்ப்பை அதிகரிப்பேன்
கார்த்திகேயன், 43: 'டிரக்' (லாரி) சின்னத்தில் போட்டியிடுகிறேன். அனைவரும் என்ன நோக்கத்துக்காக போட்டியிடுகிறார்களோ, அதே நோக்கத்துக்கு தான் நானும் போட்டியிடுகிறேன். உள்ளூரில் எனக்கு தெரிந்தவர்களிடம் மட்டும் ஓட்டுக் கேட்கிறேன்.
2021 சட்டசபை தேர்தலில், பவானி தொகுதியில் போட்டியிட்டேன். இன்னமும் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை கூட வேட்பாளர்களால் செய்து முடிக்க முடிவதில்லை என்பது வேதனையாக உள்ளது.
நான் வெற்றிபெற்றால், அரசு அதிகாரிகள் சரிவர கடமையை செய்ய உத்தரவிடுவேன். எல்லோருக்கும் 'செய்யும் தொழிலே தெய்வம்'. வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தேவையான முயற்சி எடுப்பேன்.
விவசாயிகளுக்கு பென்சன் கிடைக்கும்
சுப்ரமணி, 64: சிலிண்டர் சின்னத்தில் போட்டிடுகிறேன். தேர்தலில் போட்டியிட ஆசையாக இருந்தது; போட்டியிடுகிறேன். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளராக உள்ளார். நல்லுார், விஜயாபுரம், சந்திராபுரம் பகுதியில் பிரசாரம் செய்கிறேன். நான் வெற்றி பெற்றால், 50 வயதை கடந்த, விவசாயிகளுக்கு மாதம், 5,000 ரூபாய் ஓய்வூதியம் தருவேன். விவசாய பணிக்கு முக்கியத்துவம் தருவேன்.
நுால் விலை உயர்வு கட்டுப்படுத்துவேன்
வேலுச்சாமி, 33: கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறேன். பெருந்துறை, சிப்காட் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உள்ளது என்பதால் போட்டியிடுகிறேன். சாயக்கழிவுநீர் பிரச்னைக்கும், நீர்மாசுபடுதலுக்கும் இன்று வரை தீர்வு இல்லை.
நுால் விலை உள்ளிட்ட அத்தியவாசிய பொருள் விலை உயர்வால், தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை மையப்படுத்தி, பிரசாரம் செய்து வருகிறேன். நான் வென்றால், நுால் விலை உயர்வை கட்டுப்படுத்துவேன்; நீண்ட காலமாக உள்ள சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்.
செங்குட்டுவன், 69: ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை தொடர்பு கொள்ள மொபைல் போனில் முயன்றோம். தொடர்புகொள்ள இயலவில்லை.

