/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புது வகை ஆடைகள் அணி வகுத்த ஐ.கே.எப்., கண்காட்சி இன்று நிறைவு
/
புது வகை ஆடைகள் அணி வகுத்த ஐ.கே.எப்., கண்காட்சி இன்று நிறைவு
புது வகை ஆடைகள் அணி வகுத்த ஐ.கே.எப்., கண்காட்சி இன்று நிறைவு
புது வகை ஆடைகள் அணி வகுத்த ஐ.கே.எப்., கண்காட்சி இன்று நிறைவு
ADDED : செப் 06, 2024 01:49 AM

திருப்பூர்:ஐ.கே.எப்., கண்காட்சி யில், பிரின்டிங் மற்றும் 'சிபான்' எம்பிராய்டரிங் ஆடைகள்; வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள், பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில், இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி, நடந்து வருகிறது. கண்காட்சியில், பச்சிளம் குழந்தைகள், சிறுவர், சிறுமியர்; ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் இடம் பெற்றன.
குறிப்பாக, பருத்தி மற்றும் செயற்கை நுால் கலந்த ஆடைகள், 100 சதவீத பருத்தி ஆடைகள், 100 சதவீத செயற்கை நுாலிழை ஆடைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 100 சதவீதம் மூங்கில் நாறில் தயாரிக்கப்பட்ட 'டி-சர்ட்'கள் இடம் பெற்றுள்ளன.
கரூர் நிறுவனங்கள், பருத்தி, கலப்பு பருத்தி நுால்கள், பருத்தி மறுசுழற்சி நுால்களில் தயாரித்த, வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளன. சமையல் அறையில் பயன்படுத்தும் ஜவுளி பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், இரவு நேர ஆடைகள், தலையணைகள், பொம்மைகள், தோரணங்கள் இடம்பெற்றுள்ளன.
பொள்ளாச்சியை சேர்ந்த நிறுவனங்கள், செயற்கை நுாலிழைகள், மறுசுழற்சி நுாலிழை மற்றும் துணிகளை காட்சிப்படுத்தியுள்ளன. மதிப்புகூட்டப்பட்ட ஆடைகளை காட்சிப்படுத்தியிருந்தது, பலரையும் கவர்ந்தது.
அழகிய 'டி-சர்ட்'களில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்த 'ஸ்டோன்' வேலைப்பாடு; பிரின்ட்டிங் செய்த பிறகு, 'சிபான்' பொருட்களால் செய்யப்பட்ட எம்ப்ராய்டரிங், பலரையும் கவர்ந்தது. கே.பி.ஆர்., நிறுவனத்தின், மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகள் கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தன.
ஏற்றுமதி ஆடை உற்பத்தியில் பயன்படுத்தப்படும், சணல், பருத்தி, மூங்கில் நுாலிழையில் செய்யப்பட்ட, உதிரி பாகங்களும் இடம்பெற்றுள்ளன.
அதிக வேலை வாய்ப்புகள் மூலமாக, 'டி-சர்ட்'கள் விலை மூன்று மடங்கு வரை அதிக விலைமதிப்பை பெறுவதாக, நிறுவனத்தினர் தெரிவித்தனர். இதேபோல், ராணுவ சீருடைகள், கப்பல் படையினருக்கான சீருடைகள், பொறியியல் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான, கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் சீருடைகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.
கண்காட்சியில், திருப்பூரின் முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, கரூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த நிறுவனங்களும், ஸ்டால் அமைத்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும், இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி, இன்றுடன் நிறைவுபெறுகிறது.