ADDED : மார் 04, 2025 11:34 PM

உடுமலை; உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், அதிகளவு தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் காய்கறிகளை, உடுமலை நகராட்சி மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து ஏலமுறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் மறையூர், மூணாறு மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
நடப்பு பருவத்தில், கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்த நிலையில், தற்போது நிலையில்லாத விலை காரணமாக, கடுமையாக பாதித்துள்ளனர்.
நேற்று, 14 கிலோ கொண்ட பெட்டி, ரூ.20 முதல், ரூ.80 வரை மட்டுமே விற்பனையானதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காய்கள் தாங்காதது மற்றும் பிற மாவட்ட வியாபாரிகள் வருகை இல்லாததால், தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'தக்காளி சாகுபடிக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது. பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம், ஏல கமிஷன் தொகை கூட மிஞ்சாத விலையில், பல இடங்களில் விவசாயிகள் காயை பறிக்காமல், வயல்களிலேயே விடும் அவல நிலை உள்ளது.'
'வரத்து அதிகரிக்கும் போது, விவசாயிகள் பாதிக்காத வகையில், சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கவும், குளிர் சாதன இருப்பு கிடங்கு வசதி, தக்காளி ஜாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கு, அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.