/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொழுமம் வாரச்சந்தையை மேம்படுத்துங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
/
கொழுமம் வாரச்சந்தையை மேம்படுத்துங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
கொழுமம் வாரச்சந்தையை மேம்படுத்துங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
கொழுமம் வாரச்சந்தையை மேம்படுத்துங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 26, 2025 11:38 PM
உடுமலை: கொழுமம் வாரச்சந்தையை மேம்படுத்தி, சுகாதார சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடத்துக்குளம் ஒன்றியம், கொழுமத்தில், வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் உட்பட சுற்றுப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், மக்கள், தங்களுக்கு தேவையான காய்கறிகளை உள்ளூரிலேயே வாங்கவும், இந்த சந்தை பயன்பட்டு வருகிறது.
மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள, இந்த சந்தை முறையாக பராமரிக்கப்படாமல், சுகாதார சீர்கேடு நிலவும் பகுதியாக உள்ளது.
விற்பனைக்கு பிறகு காய்கறி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. வளாகத்தில், பல இடங்களில், கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. காய்கறி கழிவுகளை உரமாக்கவும், திட்டத்துக்காக கட்டப்பட்ட தொட்டிகள் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது.
ஒன்றிய பொது நிதியின் கீழ், கட்டப்பட்ட நான்கு கடைகள் திறக்கப்படாமல், பூட்டியே கிடக்கிறது. இதனால், திறந்தவெளியில், காய்கறிகளை விற்பனை செய்யும் நிலை உள்ளது.
மேற்கூரையுடன் கூடிய கடைகளும், தற்காலிக ஆக்கிரமிப்புகளால், பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. கழிப்பிடமும் பயன்பாட்டில் இல்லை.சுகாதார சீர்கேடுகள் நிரந்தரமாக உள்ளதால், காய்கறி விற்பனை செய்யவும், வாங்கவும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
போதிய இடவசதியுடன், அமைந்துள்ள வாரச்சந்தை முறையான பராமரிப்பு இல்லாமல், வீணாகி வருவது அப்பகுதி மக்களை கவலையடைய செய்துள்ளது.
மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகம், கொழுமம் வாரச்சந்தையில், உடனடியாக சுகாதார சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
காட்சிப்பொருளாக கடைகளை பயன்பாட்டுக்கு திறந்து, கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இதனால், சுற்றுப்பகுதி கிராமங்களின் முக்கிய விற்பனை மையமாக கொழுமம் மாறும்; அதிகளவு விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறுவார்கள். இது குறித்து அப்பகுதி மக்கள் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும், புகார் மனு அனுப்பியுள்ளனர்.

