/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதரின் நடுவே நுாலகம்; அச்சத்தில் வாசகர்கள்
/
புதரின் நடுவே நுாலகம்; அச்சத்தில் வாசகர்கள்
ADDED : ஜூலை 24, 2024 08:35 PM

உடுமலை : பெரியகோட்டை ஊராட்சியில் உள்ள நுாலகத்தின், சுற்றுப்பகுதியில் புதர்மண்டி இருப்பதால் வாசகர்கள் பயன்படுத்த தயங்குகின்றனர்.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட பெரியகோட்டை ஊராட்சியில், ஊர்ப்புற நுாலகம் அமைந்துள்ளது. இந்நுாலகம் தினமும் காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரையிலும், மாலையில், 4:00 முதல், 6:30 மணி வரையிலும் செயல்படுகிறது.
அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இந்நுாலகம் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நுாலகம் அமைந்துள்ள பகுதி முறையான பாதுகாப்பில்லாமலும், பராமரிப்பில்லாமலும் இருப்பதால், வாசகர்கள் சென்று வருவதற்கு தயங்குகின்றனர். நுாலகத்தை சுற்றிலும் புதர் செடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகளின் இடமாக மாறியுள்ளது.
மேலும் அப்பகுதியில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் வாசகர்கள் இந்த நுாலகத்தை பயன்படுத்துவதற்கு முன்வருவதில்லை. புதர்காட்டிற்கு நடுவே நுாலகம் இருக்கும் வகையில் கட்டடம் இருப்பதால், விஷப்பூச்சிகளும் அவ்வப்போது வந்து வாசகர்களை அச்சுறுத்துகிறது. இதுகுறித்து பல முறை வாசகர்கள், புகார் தெரிவித்துள்ளனர். எனவே, நுாலகத்துறை மற்றும் உள்ளாட்சி துறை இணைந்து, நுாலகத்தின் சுற்றுப்பகுதியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

