/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புரிதல் இல்லாத வீடியோ பதிவு: தொழிலாளி வேதனை!
/
புரிதல் இல்லாத வீடியோ பதிவு: தொழிலாளி வேதனை!
ADDED : மார் 02, 2025 04:57 AM

அவிநாசி: 'தவறாக வீடியோ பதிவிட்டதால், என்னை பலரும் போனில் திட்டுகின்றனர். நான் அவ்வாறு செய்யவே இல்லை,' என்று டூவீலர் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழிலாளி வேதனை தெரிவித்தார்.
அவிநாசி அருகே பழங்கரையில், சேலம் - கொச்சி பைபாஸ் ரோட்டில் உள்ள வாகன ஓட்டிகள் ஓய்வெடுக்கும் பகுதி அருகே கடந்த, 27ம் தேதி மங்கலத்தில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து சென்னை நோக்கி மினி கன்டெய்னர் லாரியை மங்கலத்தை சேர்ந்த ஆசாத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரி பஞ்சர் ஆகி உள்ளது. பின்பக்க டயரில் கூரிய ஆயுதம் போன்ற இரும்பு பொருள் ஒன்று ஏறி கிழித்ததால் டயர் பஞ்சராகி உள்ளது.
அதன் அருகிலேயே பைபாஸ் ரோட்டில் 'பஞ்சர் மெக்கானிக்' என பெயின்டில் எழுதப்பட்டு அதற்கு கீழேயே தொடர்பு எண்ணும் எழுதப்பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு அழைத்த ஆசாத் 'பஞ்சர் ஒட்ட வேண்டும்' என கூறியுள்ளார்.
ஆனால், அந்த நபர் தான் டூவீலர்களுக்கு மட்டுமே பஞ்சர் ஒட்டுவதற்கான கருவிகளை வைத்துள்ளதாகவும், பெருமாநல்லுாரில் பெரிய வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுவதற்கான மொபைல் பஞ்சர் யூனிட் வாகனம் உள்ளது. 1,500 ரூபாய் கேட்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஆசாத், 'ரோட்டில் ஆணி, போல்ட் போன்ற இரும்பாலான கூரிய ஆயுதங்களை போட்டு வாகன டயர்களை பஞ்சர் செய்கின்றனர். பஞ்சர் ஒட்ட, 1,500 ரூபாய் கேட்கின்றனர். அதனால், வாகன ஓட்டிகள் பைபாஸ் ரோட்டில் முதல் மற்றும் இரண்டாவது ட்ராக்கில் மட்டும் வரவும். கடைசியாக உள்ள ட்ராக்கில் யாரும் வரவேண்டாம். ஆபத்து' என பிற வாகன ஓட்டிகளை எச்சரிக்கின்ற விதமாக வீடியோ பதிவு செய்து பதிவிட்டுள்ளார்.
'திட்டிய' நெட்டிசன்கள்
இதனால், பலரும் அந்த பஞ்சர் ஒட்டும் நபருக்கு தொடர்பு கொண்டு சரமாரியாக திட்டியுள்ளனர். இதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில் பெருமாநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அவிநாசி டி.எஸ்.பி., சிவக்குமார் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
போலீசார் கூறியதாவது:
பஞ்சர் மெக்கானிக் என ரோட்டில் எழுதி வைத்த நபரை அழைத்து விசாரித்த போது நாமக்கல் மாவட்டம், அரூர் அருகே எ.பள்ளிபட்டி பகுதியை சேர்ந்த குமார், 52, என்பதும், தற்போது, அவிநாசி - ராயம்பாளையம் பகுதியில் காட்டு மாரியம்மன் கோவில் அருகே வசிப்பது தெரிந்தது.
இவர் தெக்கலுார் பகுதியில் இருந்து பெருமாநல்லுார் செல்லும் ரோட்டில் நியூ திருப்பூர் வரை தனது மொபைல் போன் நம்பரை எழுதி வைத்துள்ளார். அவர், டூவீலர் டயர்களுக்கு மட்டுமே பஞ்சர் ஒட்டுகிறார். கனரக வாகனங்களுக்கு ஒட்டுவதில்லை.
வீடியோ பதிவிட்ட ஆசாத்திடமும் விசாரித்தோம். தனது கம்பெனி வாகன டிரைவரை எச்சரிக்கவே வீடியோ பதிவிட்டதாக கூறினார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதற்கிடையில், சேலம் - கொச்சி பைபாஸ் ரோட்டில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை போலீசார் அழித்து விட்டனர்.
வாழ்வாதாரம் பாதித்து விட்டது
இப்பிரச்னை குறித்து, குமார் கூறியதாவது:
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ, தொடர் விடுமுறை நாட்களில் கோவை பகுதியில் இருந்து டூவீலர்களில் தங்களது ஊருக்கு செல்பவர்கள் அதிகமாக உள்ளனர். இரவு நேரங்களில் டூவீலர் பஞ்சரானால் பைபாஸிலிருந்து ஊருக்குள் வண்டியை தள்ளி கொண்டு வர வேண்டும். 2 - 3 கி.மீ., தூரம் ஒவ்வொரு பகுதியிலும் ஊருக்குள் வரும் துாரமாக உள்ளது. இதுபோல், எழுதி வைத்தால் அவர்கள் என்னை தொடர்பு கொள்ளும்போது உடனடியாக சென்று பஞ்சரான டயர்களை ஒட்டி தருகிறேன்.
அதற்கு கட்டணமாக, 150 - 200 ரூபாய் மட்டுமே கட்டணமாக வாங்குகிறேன். தவறாக வீடியோ பதிவிட்டதால், என்னை பலரும் போனில் திட்டுகின்றனர். நான் அவ்வாறு செய்யவே இல்லை. மிகுந்த மன உளைச்சலாக இருக்கிறது. என் வருமானம் பாதித்துள்ளதால், மிகுந்த சிரமத்துள்ளாகி வருகிறேன்.
இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.