/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தை வளாகத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள்; பிரதான ரோடுகளில் அணிவகுக்கும் வாகனங்கள்
/
சந்தை வளாகத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள்; பிரதான ரோடுகளில் அணிவகுக்கும் வாகனங்கள்
சந்தை வளாகத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள்; பிரதான ரோடுகளில் அணிவகுக்கும் வாகனங்கள்
சந்தை வளாகத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள்; பிரதான ரோடுகளில் அணிவகுக்கும் வாகனங்கள்
ADDED : ஆக 06, 2024 10:03 PM

உடுமலை : உடுமலை நகராட்சி சந்தையில், ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் ரோட்டில் அணிவகுப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை நகராட்சி சந்தைக்கு, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார கிராமங்களிலுள்ள விவசாயிகள், உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மேலும், 300க்கும் மேற்பட்ட தினசரி விற்பனை கடைகளும் அமைந்துள்ளன.
தினமும், ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், சந்தை வளாகம் மற்றும் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
தற்போது, தக்காளி சீசன் துவங்கியுள்ளதால், தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் கொள்முதல் செய்த காய்கறிகளை மற்ற மாவட்டங்களுக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்கள் என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
நகராட்சி சந்தை வளாகத்தில், வாகனங்கள் நுழையவும், சுங்க கட்டணம் வசூலிக்கவும் ஒரு வழித்தடம் மட்டும் உள்ளது.
கட்டணம் வசூலிக்க, நுழைவாயில் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், ராஜேந்திரா ரோட்டில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.
மேலும், சந்தை வளாகத்திற்குள், காய், கனி கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மற்றும் கடைகள் அதிகளவு ஆக்கிரமித்து, கூரைகள் அமைத்துள்ளனர்.
வாகனங்கள் செல்லும் ரோடுகளை ஆக்கிரமித்து, கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல், ரோட்டிலேயே நிற்க வேண்டியதுள்ளது.
மேலும், புதிதாக கடைகள் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட குழிகள், கழிவுகள் அகற்றப்படாததால், தெற்கு பகுதியில் முழுமையாக பயன்படுத்த முடியாமல், சந்தை வளாகம் குறுகலாக மாறியுள்ளது.
இதனால், காய்கறி ஏற்றி வரும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதிகளில் நிறுத்தப்படுவதால், போக்குவர்தது நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, சந்தை வளாகத்திற்கு தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை முழுமையாக பயன்படுத்தும் வகையில், கட்டட கழிவுகளை அகற்றி, துாய்மைப்படுத்த வேண்டும்.
தெற்கு பகுதி நுழைவாயில் வழியாகவும் வாகனங்களை அனுமதிக்க வேண்டும். சந்தை வளாகத்தில், முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள கடைகள், நிழற்பந்தல் ஆகியவற்றை முழுமையாக அகற்றி, விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.