/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இ-ஆபீஸ் திட்டம் வழியே தகவல் பரிவர்த்தனை எளிது'
/
'இ-ஆபீஸ் திட்டம் வழியே தகவல் பரிவர்த்தனை எளிது'
ADDED : ஆக 11, 2024 01:19 AM

திருப்பூர்;'இ-ஆபீஸ்' திட்டத்தின் வழியே, அரசுத்துறை அலுவலகங்கள் இடையேயான தகவல் பரிவர்த்தனை எளிதாகியுள்ளதாக, மின்னாளுமை திட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
'இ-ஆபீஸ்' நடைமுறை குறித்த பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காகித பயன்பாட்டை குறைக்கவும், விரைவான தகவல் தொடர்பை ஊக்குவிக்கவும், மத்திய அரசு, 'இ-ஆபீஸ்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அரசுத்துறை அலுவலகங்கள் தேர்வு செய்யப்பட்டு, காகித பயன்பாடற்ற, 'இ-ஆபீஸ்' என்ற ஆன்லைன் தகவல் பரிமாற்ற பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களில், 'இ-ஆபீஸ்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு பின், வருவாய்த்துறையில் பரவலாக இடமாறுதல் வழங்கப்பட்டது. துணை தாசில்தார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, 'இ-ஆபீஸ்' நடைமுறைகள் குறித்த பயிற்சி முகாம் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மின்னாளுமை திட்ட முகமை மாவட்ட மேலாளர் முத்துக்குமார், 'பவர்பாயின்ட்' வாயிலாக, 'இ-ஆபீஸ்' நடைமுறைகளை விளக்கி பேசியதாவது:
'இ-ஆபீஸ்' பக்கத்தை பயன்படுத்தி, ஆன்லைன் வாயிலாக விரைவாக தகவல்களை பரிவர்த்தனை செய்யலாம். ஒவ்வொரு அரசுத்துறை மற்றும் பிரிவுகள் வாரியாக, பிரித்து கடிதங்களை அனுப்பலாம். கோப்புகளுக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே பெயரிட வேண்டும். குறிப்பு பகுதியில், தமிழில், நான்கு வரிகளில் கோப்பு தொடர்பான விவரத்தை பதிவு செய்து வைத்தால், தேடி எடுக்க எளிதாக இருக்கும். அவசரமாக தேடி எடுக்க வசதியாக, ஒவ்வொரு கோப்புகளுக்கு, தனித்தனியே எண் வரிசையிட்டு பராமரிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
---
பேனல்
'இ-ஆபீஸ்' நடைமுறை குறித்த பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அலுவலர்கள்.