/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மோசடி குற்றங்களில் சிக்கும் அப்பாவிகள்; தப்பும் 'சைபர்' குற்றவாளிகள்
/
மோசடி குற்றங்களில் சிக்கும் அப்பாவிகள்; தப்பும் 'சைபர்' குற்றவாளிகள்
மோசடி குற்றங்களில் சிக்கும் அப்பாவிகள்; தப்பும் 'சைபர்' குற்றவாளிகள்
மோசடி குற்றங்களில் சிக்கும் அப்பாவிகள்; தப்பும் 'சைபர்' குற்றவாளிகள்
ADDED : ஆக 04, 2024 05:14 AM

திருப்பூர் : பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் மோசடிகளுக்கு, மக்களின் அறியாமையை பயன்படுத்தி, அந்த குற்றங்களுக்கு உடந்தையாக்கி வருகின்றனர். இதனால், வங்கி கணக்கு துவக்கம், சிம் கார்டு போன்றவற்றை யாருக்கும் வாங்கி கொடுக்காமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் சமீப காலமாக ஓட்டல், உணவு, மேப் ரிவ்யூ போன்றவற்றுக்கு 'ரேட்டிங்' கொடுத்தால் கமிஷன் கிடைக்கும்; அதிக 'டாஸ்க்'குகளை முடிப்பவர்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கும் என நம்பவைத்து மக்களை முதலீடு செய்ய வைத்து 'சைபர்' மோசடிகள் அரங்கேறுகின்றன.
மோசடி கும்பல்கள் போலீசாரிடம் சிக்காமல் இருக்க பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். மோசடி கும்பல்களிடம் சாதாரண மக்களை காட்டிலும், படித்த வாலிபர்கள், ஐ.டி., பணியாளர்கள், ஏற்றுமதி நிறுவனம் நடத்துபவர்கள் என பலரும் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்து வருகின்றனர்.
மக்களை ஏமாற்றி வங்கி கணக்கு திறப்பு
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
பலரும் விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சைபர் மோசடிகளில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுக்கின்றனர். சிலர் வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல், எளிதாக மோசடி வலைகளில் சிக்கி கொள்கின்றனர். இதற்கு முன்பு வங்கியில் இருந்து அழைக்கிறோம்; கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம்; போதை பொருள் கடத்தியது தொடர்பாக போலீசார் பேசுகிறோம் என, பலவற்றை கூறி பணத்தை பறித்தனர். தங்களின் பணத்தை மட்டுமே மக்கள் இழந்து வந்தனர். தற்போது, மோசடி ஆசாமிகள், மக்களையும் குற்றவாளிகளாக சிக்க வைக்கின்றனர்.
கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் தெரிந்த நபர்கள் மூலம் 'வீடியோ கேம்' விளையாட வங்கி கணக்கு, சிம் கார்டு தேவைப்படுகிறது என்று கூறி, இதற்காக, ஆயிரம் முதல், இரண்டாயிரம் ரூபாய் வரை பணம் கொடுக்கின்றனர். அவர்களின் ஆவணங்களை வைத்து முதலில் சிம் கார்டு வாங்குகின்றனர். பின், வங்கி கணக்கை துவக்கி 'பாஸ்புக்', ஏ.டி.எம்., கார்டு ஆகியவற்றை வாங்குகின்றனர். இதுபோன்று பலரிடம் இதே பாணியை பின்தொடர்ந்தனர். மொத்தமாக வாங்கப்படும் விபரங்களை நேரில் சென்று கொடுத்து வருகின்றனர். இதற்காக, கமிஷனாக லட்சங்களை பெறுகின்றனர்.
போலீசாரிடம் சிக்காமல் இருக்க மோசடி கும்பல்கள் இந்த வழியே பயன்படுத்துகின்றனர். பல மோசடிகளுக்கு, வங்கி கணக்கு மூலம் பணத்தை பெற்று, வெளிநாடுகளில் இருந்தபடியே பணத்தை எடுத்து விடுகின்றனர். போலீசாரிடம் சிக்கினால், வங்கி கணக்கை துவக்கி கொடுத்தவர் மாட்டி கொள்கிறார். இந்த கும்பல், கோவையில் மட்டும், 400 பேரிடம் இதுபோன்று வங்கி விபரங்களை பெற்றுள்ளது தெரிய வந்தது.
பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டும் சொற்ப ஆயிரங்களுக்காக வங்கி கணக்கு துவக்கம், சிம் கார்டு வாங்கி கொடுப்பது போன்ற வேலையில் ஈடுபட வேண்டும். தங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் குற்றங்கள் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட நபர்களும் குற்ற செயலில் ஈடுபட்டதாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற வேலைக்காக யாராவது உங்களை அணுகினால் போலீசாரிடம் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.