/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடந்துாரில் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் கண்காணிக்க வலியுறுத்தல்
/
கோடந்துாரில் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் கண்காணிக்க வலியுறுத்தல்
கோடந்துாரில் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் கண்காணிக்க வலியுறுத்தல்
கோடந்துாரில் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் கண்காணிக்க வலியுறுத்தல்
ADDED : செப் 03, 2024 01:57 AM
உடுமலை;கோடந்துார் பகுதியில், வனச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிகழ்வுகளை, வனத்துறையினர் தடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனசரகத்துக்குட்பட்டது கோடந்துார். இங்கு, பிரசித்தி பெற்ற கட்டளை மாரியம்மன் கோவில் உள்ளது.
சின்னாறு ரோட்டிலிருந்து, இரண்டு கி.மீ., துாரத்தில், வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வாரந்தோறும் இரு நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த, வனத்துறை அனுமதியளிக்கிறது. கோடந்துார் மலைவாழ் கிராம மக்கள் மற்றும் வனத்துறை இணைந்த குழு சார்பில், வாகனங்கள், கோவிலுக்கு இயக்கப்படுகிறது.
கோவிலுக்கு வருபவர்கள், வனப்பகுதியிலுள்ள, சின்னாற்றில் குளிக்கச்செல்கின்றனர். அப்போது, வனச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், சிலரது செயல்பாடுகள் உள்ளன.
அருகில், அடர்ந்த வனப்பகுதி உள்ள நிலையில், காற்று மற்றும் இதர காரணங்களால், அங்கு வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.
அதை கண்டுகொள்ளாமல், சிலர், அப்பகுதியில், புகை பிடிப்பதும், கீழே கிடக்கும் சருகுகள் மற்றும் மரக்கட்டைகளுக்கு தீ வைப்பதும் தொடர்கதையாக உள்ளது.
அங்குள்ள மலைவாழ் கிராம மக்கள் இதை தவிர்க்க வலியுறுத்தினாலும், பிற பகுதிகளிலிருந்து வரும் மக்கள் அதை கேட்பதில்லை.
வனத்தீ ஏற்படும் அபாயத்தை தவிர்க்க, வனத்துறை சார்பில், கோவிலுக்கு மக்கள் அனுமதிக்கப்படும் நாட்களில், கண்காணிப்புக்கு தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும்.
இதே போல் பிளாஸ்டிக் பாட்டில்கள் அனைத்து பகுதிகளிலும் வீசி எறியப்பட்டுள்ளன. எனவே அப்பகுதியில், வனச்சூழல் பாதிப்பதை தவிர்க்க, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வனத்துறைக்கு வலியுறுத்தியுள்ளனர்.