/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் அரிசி கடத்தல் தடுக்க தீவிரம்
/
ரேஷன் அரிசி கடத்தல் தடுக்க தீவிரம்
ADDED : ஜூன் 26, 2024 10:41 PM
அவிநாசி : ''ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சுரேஷ்குமார் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்கிறது. அவிநாசி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்கும் அரிசியை வாங்கி, அரிசி ஆலைக்கு விற்பனை செய்யும் முறைகேட்டில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.அரிசியை மூட்டை மூட்டையாக கட்டி மொபட்டில் வைத்து, ராயம்பாளையத்தில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு கொண்டு சென்றது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சுரேஷ்குமார் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட அரிசி கடத்தல் நபர் பற்றி விசாரித்து வருகிறோம். விரைவில் பிடித்து விடுவோம். அரிசி கடத்தல் தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் உடந்தையாக செயல்படுவது தெரிந்தால், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
அவிநாசி வட்ட வழங்கல் அதிகாரி சித்தையன் கூறுகையில், ''தாசில்தார், ஆர்.ஐ., ஆகியோருடன் பறக்கும் படையினர் அவிநாசி மற்றும் பெருமாநல்லுார் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை இருக்கும்,'' என்றார்.
மண் கடத்தல்: வருவாய்த்துறை ஆய்வு
பொங்கலுார்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, திருப்பூர் அருகே உப்புக்கரை நதியில் மண் கடத்தல் நடந்த இடத்தை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
அலகுமலையில் உற்பத்தியாகி ஆகும் நொய்யல் ஆற்றின் கிளை நதியான உப்புக்கரை நதி படுகையில் மர்ம நபர்கள் கிராவல் மண் வெட்டி எடுத்துச் சென்றனர். இதனால், நதியின் நீர் வழித்தடம் பாதிக்கப்பட்டு மண் அரிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர் நேற்று மண் கடத்தல் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த அதிகாரிகளிடம் ''இனிமேல் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்தால் போராட்டம் நடத்துவோம்'' என்று கிராம மக்கள் எச்சரித்தனர். 'இதுபோன்ற அத்துமீறல்கள் தடுக்கப்படும்'' என்று அதிகாரிகள் அவர்களிடம் உறுதியளித்தனர்.