/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வதேச தரத்தில் மைதானம்... இன்னும் பெரும் கனவு!
/
சர்வதேச தரத்தில் மைதானம்... இன்னும் பெரும் கனவு!
ADDED : செப் 01, 2024 02:31 AM

அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க, அரசின் சார்பில் விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது, திருப்பூர் நகரில் உள்ள விளையாட்டு ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுனர்களின் ஆவலாக இருந்து வருகிறது.
அவர்களின் ஆவலை நிறைவேற்றி, ஆதங்கத்தை போக்கும் வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசுக்கல்லுரி பின்புறம், 11 ஏக்கர் நிலத்தில், சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, அரசு மற்றும் உள்ளூர் நிதி திட்டத்தின் கீழ், 18 கோடி ரூபாய்க்கு கருத்துரு தயாரிக்கப்பட்டு, முதல் கட்டமாக, அரசின் சார்பில், 9 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டது. இதில், அரங்கம் மற்றும் மைதான சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
உடற்பயிற்சி கூடம், 400 மீ., தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னிஸ், வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி, ேஹண்ட்பால், கபடி விளையாட்டுக்கான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்பணிகள் பாதியில் நிற்கிறது. உள்ளூர் நிதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் தான், பணி தொடர்வதில் தடுமாற்றம் தென்படுகிறது எனக் கூறப்படுகிறது.
'மைதானம் உருவானால், இன்னும் பல வீரர்கள், தங்கள் திறமையை பட்டைத்தீட்டிக் கொள்ள முடியும். இந்த ஒரு மைதானம் மட்டுமல்ல, இன்னும் ஓரிரு இடங்களில் மைதானம் அமைத்தால் கூட, இன்னும் ஏராளமான வீரர், வீராங்கனைளை விளையாட்டு உலகில் பிரகாசிக்க செய்ய முடியும் என்கின்றனர்' விளையாட்டு பயிற்சியாளர்கள்.
---
சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் உருவாகிவரும், சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம்.