/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆஸ்திரேலியாவில் சர்வதேச ஜவுளி கண்காட்சி
/
ஆஸ்திரேலியாவில் சர்வதேச ஜவுளி கண்காட்சி
ADDED : ஆக 10, 2024 09:19 PM
திருப்பூர்:ஆஸ்திரேலியாவில், வரும் நவ., 19ல் துவங்கி, 21 ம் தேதி வரை நடக்கும், சர்வதேச ஜவுளி கண்காட்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
உலகளாவிலய ஜவுளி உற்பத்தியாளர், வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக முகமைகள் பங்கேற்கும், கண்காட்சி, ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்படுகிறது. ஒரே இடத்தில் அனைவரும் கூடி, கண்காட்சியை பார்வையிட்டு, வர்த்தக வளர்ச்சிக்கான விசாரித்து, ஆர்டர் பெறுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
ஆஸ்திரேலியாவின், மெல்பேர்ன் நகரில் உள்ள வர்த்தக மையத்தில், வரும் நவ., 19ல் துவங்கி, 21ம் தேதி வரை, சர்வதேச ஜவுளி கண்காட்சி நடக்கிறது. மத்திய அரசின், மானிய உதவியுடன் பங்கேற்று பயன்பெறுமாறு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வளர்ச்சி
ஆஸ்திரேலியாவில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள் தேவை அதிகரித்துள்ளது; நடப்பு ஆண்டில் அந்நட்டின் ஜவுளி இறக்குமதி ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து, 448 கோடி ரூபாயாக உயருமென, கணிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஆர்டருக்கு வாய்ப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இருப்பதால், நம் நாட்டுக்கு கூடுதல் வர்த்தக வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இக்கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, பசுமை சார் உற்பத்தி சாதனைகளை எடுத்துரைத்து, திருப்பூருக்கு கூடுதல் ஆர்டர்களை ஈர்க்கலாம் என, ஏற்றுமதியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
சீனா முதலிடம்
ஆஸ்திரேலியாவின் மொத்த இறக்குமதியில், சீனாவின் பங்களிப்பு, 59 சதவீதம், வங்கதேசத்தின் பங்களிப்பு, 11 சதவீதம், வியட்நாம் பங்களிப்பு, 7 சதவீதமாக உள்ளது. இந்தியா, 4.60 சதவீத பங்களிப்புடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. வங்கதேசத்தில் நிலவும் உள்நாட்டு குழப்பத்தால், இக்கண்காட்சி வாயிலாக, இந்தியாவுக்கு கூடுதல் வர்த்தக வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக, தொழில்துறையினர் நம்புகின்றனர்.