/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டாசு கடை உரிமம் விண்ணப்பிக்க அழைப்பு
/
பட்டாசு கடை உரிமம் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 14, 2024 01:01 AM
திருப்பூர்;திருப்பூர் நகரப்பகுதியில், பட்டாசு கடை வைக்கும் உரிமத்துக்கு நேற்று முதல் விண்ணப்பம் பெறும் பணி துவங்கியது.
இவ்வாண்டு தீபாவளி பண்டிகை அக்., 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் நேற்று முதல் (13ம் தேதி) வரும் செப்., 12ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதில், விண்ணப்பப்படிவம் ஏ.இ., 5ல் ரூ.2 மதிப்புள்ள கோர்ட் வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமம் கட்டணம் ரூ.1,200 ஆன்லைனில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தின் வரைபடம், ஆறு நகல்கள், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும்.
பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்த கட்டடமாக இருப்பின் சொத்து வரி ரசீது இணைக்கப்பட வேண்டும். வாடகை கட்டடமாக இருப்பின், சொத்துவரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டட உரிமையாளருடன் ரூ.20 மதிப்புக்கு குறையாத முத்திரை தாளில் ஏற்படுத்தி கொண்ட வாடகை ஒப்பந்த ஆவணம். இந்த ஆவணங்களுடன் செப்., 12ம் தேதி மாலை, 5:00 மணிக்கு முன்பாக விண்ணப்பங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு விசாரணைக்கு பின் போலீஸ்துறை மற்றும் தீயணைப்புறை ஆய்வு செய்து பின்னே தற்காலிக உரிமம் வழங்கப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பின்றி தள்ளுபடி செய்யப்படும் என்று மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.