/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடுகளை காப்பாற்ற 'இரும்பு பட்டி'; எடுபடாத அமைச்சர் யோசனை
/
ஆடுகளை காப்பாற்ற 'இரும்பு பட்டி'; எடுபடாத அமைச்சர் யோசனை
ஆடுகளை காப்பாற்ற 'இரும்பு பட்டி'; எடுபடாத அமைச்சர் யோசனை
ஆடுகளை காப்பாற்ற 'இரும்பு பட்டி'; எடுபடாத அமைச்சர் யோசனை
ADDED : பிப் 25, 2025 07:14 AM

திருப்பூர்; 'நாய்களிடம் இருந்து ஆடுகளை காப்பாற்ற, இரும்பு பட்டி அமைக்கும் யோசனையால், மண் வளத்தை பாதுகாக்கும் பாரம்பரிய விவசாய முறை பாதிக்கும்' என, விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், தெரு நாய்கள் கடித்து ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது அதிகரித்து வருகிறது.
விவசாய தோட்டங்களில், மூங்கிலால் பட்டி அமைக்கப்பட்டு, அதில் ஆடு, கோழிகள் உள்ளிட்டவை வளர்க்கப்படும் நிலையில், பட்டியின் அடிப்பகுதியில் உள்ள மண்ணை தோண்டும் நாய்கள், துளை ஏற்படுத்தி உள்ளே புகுந்து, ஆடுகளை கடிக்கின்றன.
இப்பிரச்னைக்கு தீர்வாக, இரும்பு கம்பி வலை உதவியுடன் பட்டி அமைக்க, அமைச்சர் முத்துசாமி சமீபத்தில் யோசனை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி கூறியதாவது:
பகல் நேரத்தில் மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகள், இரவில் வயலின் மைய பகுதியில் பட்டி அமைத்து, அதில் அடைக்கப்படும். ஆட்டுப்புழுக்கை, சிறுநீர் ஆகியவை மண்ணுக்கு நல்ல உரம்; அவை அந்த மண்ணில் மக்கி, மண் வளத்தை மேம்படுத்துகின்றன. இது தான் பாரம்பரிய விவசாய முறை.
இரும்புக்கம்பியால் தயாரிக்கப்படும் நிரந்தர ஆட்டுப்பட்டியால், இந்த விவசாய முறை பாதிக்கும். மேலும், நடமாடும் ஆட்டுப்பட்டி அமைக்கும் தொழிலில் ஈடுபடுவோரின் வருமானமும் தடைபடும்.
தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதை தவிர்த்து, பாரம்பரிய விவசாய முறைக்கு வேட்டு வைக்கும் பரிந்துரையை அமைச்சர் வழங்குவது ஏற்புடையதல்ல. ரோட்டில் தலைவர்களின் சிலையை நிறுவி, அதை சுற்றி கம்பி வேலியால் கூண்டு அமைப்பது போன்றது தான் இது.
இவ்வாறு அவர் கூறினார்.

