/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏழு நாட்களாகியும் பாசன நீர் வரவில்லை! அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
/
ஏழு நாட்களாகியும் பாசன நீர் வரவில்லை! அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
ஏழு நாட்களாகியும் பாசன நீர் வரவில்லை! அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
ஏழு நாட்களாகியும் பாசன நீர் வரவில்லை! அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
ADDED : ஆக 27, 2024 01:44 AM

உடுமலை:நீர் நிர்வாக பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து, ஆலாமரத்துார் பிரிவில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், புதுப்பாளையம் கிளைக்கால்வாய் வாயிலாக, 7,219 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கிளை கால்வாய்க்கு, பிரதான கால்வாய், பூசாரிபட்டி ஷட்டரில் இருந்து, ஆக., 20ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால், கொண்டம்பட்டி கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்குட்பட்ட விளைநிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட சனுப்பட்டி, வல்லக்குண்டாபுரம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில், ஆலாமரத்துார் பிரிவு பகுதியில், நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீண்ட நேரமாக சம்பவ இடத்துக்கு வரவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது: புதுப்பாளையம் கிளை கால்வாயின், 11வது கி.மீ., ல், பிரியும் பகிர்மானத்தில், 1,615 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பாசன காலம் துவங்கி பல நாட்களாகியும், போதுமான தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால், மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகளுக்கு நடவு செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இப்பிரச்னை குறித்து கடந்த சில நாட்களாக, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை; சம்பவ இடத்துக்கும் வரவில்லை.
புதுப்பாளையம் கிளை கால்வாய்க்கு பொறுப்பு அதிகாரி யார் என்பதே தெரியாத அளவுக்கு நீர் நிர்வாகம் நடைபெற்று வருகிறது. தண்ணீர் திறப்புக்கு முன், கிளை கால்வாயில் அடிப்படை பராமரிப்பு பணிகள் கூட மேற்கொள்ளவில்லை.
போன் செய்தாலும் அதிகாரிகள் எடுப்பதில்லை. கிளை கால்வாயில் தண்ணீர் திறந்து ஏழு நாட்களாகியும், விளைநிலங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.
பொதுப்பணித்துறை 'லஸ்கர்' பணியாளர்களும் விவசாயிகள் புகார்களை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இதே நிலை நீடித்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு குடிமங்கலம் போலீசார், பி.ஏ.பி., திட்டக்குழு நிர்வாகிகள் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுப்பணித்துறை லஸ்கர் பணியாளரிடம் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தையில், போதுமான தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டத்தால் செஞ்சேரிமலை ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.