/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு சாத்தியமா? அதிகாரிகள் அலட்சியத்தால் சிக்கல்
/
நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு சாத்தியமா? அதிகாரிகள் அலட்சியத்தால் சிக்கல்
நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு சாத்தியமா? அதிகாரிகள் அலட்சியத்தால் சிக்கல்
நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு சாத்தியமா? அதிகாரிகள் அலட்சியத்தால் சிக்கல்
ADDED : ஏப் 02, 2024 10:23 PM
உடுமலை:வாக்காளர் பட்டியல் குளறுபடி, வந்து சேராத வாக்காளர் அட்டை, போதிய விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளாதது, என, தேர்தல் பிரிவினர் மற்றும் தபால் துறையினரின் அலட்சியத்தால், நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் கமிஷன் ஒவ்வொரு தேர்தலிலும், நுாறு சதவீத ஓட்டுப்பதிவை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, தீவிரம் காட்டி வருகிறது.
வாக்காளர் மத்தியில் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு குறித்து தொடர்ந்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனாலும், தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு என்பது, இப்போதைக்கு சாத்தியமில்லாததாகவே இருந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில், ஓட்டுப்பதிவு குறைந்த தொகுதிகளில், மடத்துக்குளம் சட்டசபை தொகுதியும் உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், மடத்துக்குளம் 67.76 சதவீதம் மட்டுமே பதிவானது.
இந்த தேர்தலிலும், மடத்துக்குளம் தொகுதியில், வாக்காளர் விழிப்புணர்வு, குளறுபடியில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுச்சாவடிகள் தயார் படுத்துதல் என தேர்தல் பணிகளில் அதிகாரிகள் 'சுணக்கம்' காட்டி வருகின்றனர்.உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், இரட்டை வாக்காளர், போலி வாக்காளர், இறந்த வாக்காளரை கண்டறிந்து, பட்டியலில் இருந்து நீக்குவதில் நீடிக்கும் சிக்கல்கள், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் (பி.எல்.ஓ.,)க்களின் அஜாக்கிரதை, வாக்காளர் அடையாள அட்டை கையில் கிடைக்காததும், ஓட்டுப்பதிவு பாதிப்புக்கு முக்கியமான காரணிகளாக உள்ளன.
கடந்த 2023 அக்., முதல் டிச., வரை, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்றன. இதில், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றங்களுக்காக ஏராளமான வாக்காளர் விண்ணப்பித்தனர்.
சிறப்பு முகாமில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்த பலரும், தங்களுக்கு இன்னும் வாக்காளர் அட்டை வந்து சேரவில்லை, என புலம்புகின்றனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள், பி.எல்.ஓ.,க்கள் வாயிலாக வீடு வீடாகச்சென்று வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால், அவர்களை தொடர்பு கொண்டால் மட்டும், வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என பதிலளிக்கின்றனர்; வீடு தேடிவந்து கொடுப்பதில்லை.
அதே போல், சிறப்பு முகாம்களில், ஒப்புகைச்சீட்டில் பதிவு எண் கூட இல்லாததால், ஆதார் எண், மொபைல் எண் பயன்படுத்தி தேர்தல் கமிஷன் தளத்தில் தேடினாலும், விபரங்களை கண்டறிய முடியவில்லை.
தங்கள் பெயர், இடம் பெற்றுள்ளதா என தெரியாமல், புதிய வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர். தபாலில், புதிய வாக்காளர் அடையாள அட்டை அனுப்பியுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
ஆனால், தேர்தல் பிரிவு அதிகாரிகள், தபால் துறையினர் அலட்சியம் காரணமாக, வாக்காளர் அடையாள அட்டை உரியவர்களுக்கு சென்று சேரவில்லை, என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அதிகாரிகள் அலட்சியத்தால், முகவரி மாற்றத்துக்காக விண்ணப்பித்த ஒரே குடும்பத்தைச் சேர்தோரின் பெயர், வெவ்வேறு பாகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதே போல், 1,500க்கும் மேல் வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, புதிய ஓட்டுச்சாவடி உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு பிரிக்கும்போது,ஒரே குடும்பத்தைச்சேர்ந்த உறுப்பினர்களுக்கு தொலை துாரங்களில் உள்ள வெவ்வேறு ஓட்டுச்சாவடிகளில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்., 19ல், லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவை அதிகரிக்கும் வகையில், மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர் வீட்டிலிருந்தபடியே ஓட்டளிக்கும் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு வழங்கப்படும் 'பூத்' சிலிப், வீடுகளுக்கு நேரடியாக வழங்க அறிவுறுத்தப்படுகிறது. இப்பணியிலும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
இவ்வாறு, அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதே உண்மை.

