/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாயில் 'காற்று' வந்தால் போதுமா! நீராதாரங்கள் மேம்பட வேண்டும்
/
குழாயில் 'காற்று' வந்தால் போதுமா! நீராதாரங்கள் மேம்பட வேண்டும்
குழாயில் 'காற்று' வந்தால் போதுமா! நீராதாரங்கள் மேம்பட வேண்டும்
குழாயில் 'காற்று' வந்தால் போதுமா! நீராதாரங்கள் மேம்பட வேண்டும்
ADDED : ஏப் 12, 2024 01:24 AM

'ஜல் ஜீவன்' திட்டத்தில், திருப்பூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் குழாய் இணைப்பு வழங்கும் பணி, கிட்டத்தட்ட நிறைவு பெற்றுள்ளது. நீராதாரங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் துணை அவசியமாகிறது. வெற்றி பெற உள்ள புதிய எம்.பி., இதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், தனிநபர் குழாய் இணைப்பு வழங்கி, அனைத்து வீடுகளுக்கும், சுத்தமான மற்றும் போதுமான குடிநீர் வினியோகம் செய்வது தான், மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டம். அதன்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு, 55 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்பதே, திட்டத்தின் இலக்கு.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 13 ஒன்றியங்களில், 4.56 லட்சம் வீடுகள் உள்ளன. ஏற்கனவே, குடிநீர் இணைப்புள்ள வீடுகள், 2.87 லட்சம். விடுபட்டுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட நுாறு சதவீதம் முடிந்தும் விட்டது.சமீபத்தில், மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு ஊராட்சிகளில், ஜல் ஜீவன் திட்டப்பணிகளை, மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர்; அதில் உள்ள நிறை, குறைகளை அறிந்து சென்றுள்ளனர்.
நீராதாரம் வறண்டால்...
திருப்பூரில் உள்ள கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீர், சிறுமுகை உள்ளிட்ட நீராதாரங்களில் இருந்து தான், நீர் பெறப்படுகிறது. பவானி ஆற்றில் நீரோட்டம் உள்ள போது, நீர் வினியோகத்தில் பிரச்னை இருக்காது; மாறாக, பவானி ஆற்றில் நீர் இல்லாத போது, நீர் வினியோகம் தடைபடும்.
குழாய் இணைப்புகள் வழங்குவது பெரிதில்லை. அதில் 'காற்று' மட்டுமே வந்தால் போதுமா? குடிநீர் வினியோகிக்கப்பட வேண்டாமா?
இதுதான் உத்தரவு
'ஜல் ஜீவன்' திட்டத்தில், சுத்தமான குடிநீர், போதியளவு வினியோகிக்கப்பட வேண்டும் என்பது தான், மத்திய அரசின் நிலைப்பாடு. ஆனால், குடிநீர் போதியளவு இல்லாததால், ஊராட்சிகளில், பெரும்பாலும் 'போர்வெல்' தண்ணீர் தான் வினியோகிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாள் இடைவெளியில் தான், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 'குடிநீர், சப்பை நீர் (போர்வெல் நீர்) என, பாகுபாடு பார்க்க வேண்டாம்; தண்ணீர் என்ற நிலையில், 'ஜல் ஜீவன்' திட்ட குழாய்களில் நீர் வினியோகம் செய்யுங்கள்' என்பதே, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளின் அறிவுரை என, ஊராட்சி செயலர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
நகர்ப்புறங்களை ஒட்டிய கிராமப்புறங்களில், குடியிருப்புகளின் எண்ணிக்கையும், மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது; ஜல் ஜீவன் திட்டத்தில், வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு விட்டாலும், அவற்றுக்கு நல்ல தண்ணீர் வழங்க, அதற்கான நீராதாரங்களில் நீர் இருக்க வேண்டும். தவறினால், 'போர்வெல்' தண்ணீரை மட்டுமே வினியோகிக்க முடியும். மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை வைத்தே, பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், பவானி ஆறு தரைதட்டினால் தண்ணீர் கிடைக்காது.
தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,க்கள், நீராதாரம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான், நபர் ஒருவருக்கு, 55 லிட்டர் நீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என, வரையறை செய்யப்பட்டுள்ளது; தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப, இந்த வரையறையை மாற்ற, தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,க்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
- ரவிக்குமார், தலைவர், அவிநாசி ஒன்றியம்மாநில ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு
கிராமப்புறங்களின் நிலை இவ்வாறு இருக்க, திருப்பூர் மாநகராட்சியிலும் குடிநீர் வினியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தற்போது, மேட்டுப்பாளையம், பவானி ஆற்றுநீரை நம்பி, நான்காவது குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
கண்காணிப்பு குழு அவசியம்
மாநகராட்சியில் தண்ணீருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; குடிநீர் வினியோகிக்கும் பணியை கண்காணிக்க, அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் அடங்கிய கண்காணிப்பு கமிட்டி அமைக்க வேண்டும். அனைத்து வார்டுகளுக்கும், சீரான இடைவெளியில், சரியான சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்வது, அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பு சரி செய்யப்படுவது, உறுதிப்படுத்தப்பட வேண்டும்.தொலைநோக்கு பார்வையுடன், வார்டுகளில் உள்ள போர்வெல் நீரை, குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தை ஏற்படுத்தி, அதன் வாயிலாக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, மழைநீர் சேகரிப்பு பணி கட்டாயமாக்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாத புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அத்தகைய விதிமுறை எதுவும் பின்பற்றப்படுவதில்லை. நிலத்தடி நீர் வளத்தை பாதிக்கும் நெகிழிப் பயன்பாட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., இவ்விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, அவ்வப்போது ஆய்வுக்கூட்டம் நடத்தி. தடையில்லா நீர் வினியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
- அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர்

