/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இப்பவே இப்படின்னா...! தலைதுாக்கும் தண்ணீர் பற்றாக்குறை
/
இப்பவே இப்படின்னா...! தலைதுாக்கும் தண்ணீர் பற்றாக்குறை
இப்பவே இப்படின்னா...! தலைதுாக்கும் தண்ணீர் பற்றாக்குறை
இப்பவே இப்படின்னா...! தலைதுாக்கும் தண்ணீர் பற்றாக்குறை
ADDED : மார் 21, 2024 11:13 AM

திருப்பூர்;மேட்டுப்பாளையம் பவானி ஆறு வற்றியுள்ள நிலையில், அந்த நீரை ஆதாரமாக கொண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் திருப்பூர் நகர மற்றும் ஊரக பகுதிகளில், குடிநீர் பற்றாக்குறை தலைதுாக்கியுள்ளது.
கோடையின் தீவிரம் துவங்கும் முன்பே, பல இடங்களில் வறட்சி தென்பட துவங்கியிருக்கிறது. குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சி, பூண்டி நகராட்சி உள்ளிட்ட நகரப்பகுதிகள், ஊரகப்பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை தலைதுாக்க துவங்கியிருக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளிலும் பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. பொது குடிநீர் குழாய்களில் தண்ணீருக்காக மக்கள் அலைமோதுகின்றனர்.
இது குறித்து திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி கூறியதாவது:
மாநகராட்சி பகுதியில், 12 நாளுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பவானி ஆற்றில் நீர் இல்லாததால், நான்காவது குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வருவதில்லை. ஆங்காங்கே, சாலையோரம் உடைபடும் குடிநீர் குழாய்களை சரி செய்ய வேண்டும்.
பழுதான 'போர்வெல்'களை பராமரித்து, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். எனது வார்டில், 23 'பேர்வெல்'கள் உள்ளன; அதில், பழுதாகியுள்ள, 8 'போர்வெல்'களை பராமரிக்க வேண்டும் என, மாநகராட்சிக்கு கடிதம் வழங்கி, ஒன்றரை மாதமாகியும் நடவடிக்கை இல்லை; இதே நிலைதான், மாநகராட்சி முழுக்க நிலவுகிறது. குடிநீர் பிரச்னையை சமாளிக்க, கண்காணிப்புக்குழு அமைத்து, அவ்வப்போது எழும் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும்.
கூடுதல் நீர் வேண்டும்
திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சிக்கான புதிய குடிநீர் திட்டம் நிறைவு செய்யப்பட்டவுடன், இரண்டாவது குடிநீர் திட்டத்தில் இருந்து, நீரை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள்.
இரண்டாவது திட்டத்தில் தினசரி 5 எம்.எல்.டி. கேட்டுள்ளோம்; தற்போது, 1.50 எம்.எல்.டி., அளவு தண்ணீர் தான் வினியோகிக்கப்படுகிறது; ஆனால், கூடுதலாக கிடைத்தால் பூண்டிக்கான தண்ணீர் பிரச்னை சமாளிக்க முடியும். இருப்பினும், இரண்டாவது குடிநீர் திட்டத்தில் இருந்து ஒரு இணைப்பை பெற்றுவிட்டோம். இவ்வாறு, அவர் கூறினார்.
பவானி ஆற்றுநீரை மையமாக வைத்தே, குடிநீர் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், நகர மற்றும் ஊரகப்பகுதிகளில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது, அவசியம்
கோடை மழைக்கு தவம்!
தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்க 'போர்வெல்' தண்ணீர் வினியோகிப்பது; லாரி தண்ணீர் வழங்குவது போன்ற மாற்று ஏற்பாடுகளில், உள்ளாட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்தினாலும், கோடை மழை மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும். எனவே, கோடை மழை எதிர்நோக்கி, மக்கள் 'தவம்' இருக்கின்றனர்.

