/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிடப்பில் போடப்படுகிறதா உழவர் தொடர்பு அலுவலர் திட்டம்! அதிகாரிகளை சந்திக்க விவசாயிகள் திட்டம்
/
கிடப்பில் போடப்படுகிறதா உழவர் தொடர்பு அலுவலர் திட்டம்! அதிகாரிகளை சந்திக்க விவசாயிகள் திட்டம்
கிடப்பில் போடப்படுகிறதா உழவர் தொடர்பு அலுவலர் திட்டம்! அதிகாரிகளை சந்திக்க விவசாயிகள் திட்டம்
கிடப்பில் போடப்படுகிறதா உழவர் தொடர்பு அலுவலர் திட்டம்! அதிகாரிகளை சந்திக்க விவசாயிகள் திட்டம்
ADDED : ஜூன் 18, 2024 11:38 PM
திருப்பூர்:வேளாண் பட்ஜெட்டில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட உழவர் தொடர்பு அலுவலர் திட்டம் நடைமுறைக்கு வராததால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கடந்த, 2020-2021ம் ஆண்டு முதல், 'உழவர் தொடர்பு அலுவலர் திட்டம்' நடைமுறையில் இருந்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனை, திட்டப்பயன் குறித்த விவரங்களை விவசாயிகளிடம் நேரடியாக கொண்டு சென்று சேர்க்கும் பணியை, இத்திட்டம் முன்னெடுத்தது.
இத்திட்டத்தின் வாயிலாக, 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறையின், 3,684 விரிவாக்க அலுவலர்கள் (உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலு வலர்) தங்கள் துறை சார்ந்த தகவல்களை வழங்கி, திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, மாநிலத்தில் உள்ள, 385 வட்டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு உதவி வேளாண்மை அலுவலர்களும், 8 முதல் 10 ஊராட்சிகள்; ஒரு உதவி தோட்டக்கலை அலுவலர், 10 முதல் 15 ஊராட்சிகளிலும் களப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால், சுழற்சி முறையில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் சென்று களப்பணியாற்ற, 10 முதல், 15 நாள் இடைவெளி ஏற்பட்டது. இதனால், 'விவசாயிகளுக்கு சேவை குறைபாடு ஏற்படுகிறது. கிராம அளவில் வேளாண்மை உழவர் நலத்துறையின் திட்டங்களை ஒரு சேர வழங்க, கிராமத்திற்கு ஒரு விரிவாக்க அலுவலரை நியமிக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்தது.
அமைச்சர் அறிவிப்பு
விளைவாக, கடந்தாண்டு மார்ச் மாதம் நடந்த வேளாண் பட்ஜெட்டில், 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' நடைமுறைக்கு வரும் என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி, வேளாண்மை உழவர் நலத்துறையின் அனைத்து துறைகளிலும் உள்ள வட்டார, கிராம அளவில் பணியாற்றும் விரிவாக்க அலுவலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, 4,311 விரிவாக்க அலுவலர்கள், 3 முதல் 4 வருவாய் கிராமங்களுக்கு ஒருவராக நியமிக்கப்படுவர்.
ஒருவர், 1,200 ஏக்கர் பரப்பளவில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் வேளாண்மை, தோட்டக்கலை, மலைப்பயிர்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் சார்ந்த அனைத்து பணிகளையும் கிராம அளவில் ஒருங்கிணைத்து 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' செயல்படுத்துவர்' எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம், இதுவரை அமலுக்கு வரவில்லை.
அதிகரிக்கும் அதிருப்தி
வேளாண் துறையினர் கூறுகையில், 'வேளாண்மை அலுவலர்கள் துவங்கி, வேளாண்மை கூடுதல் இயக்குனர் வரையிலான உயர் அலுவலர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது தான், திட்டம் கிடப்பில் போட காரணமாக இருக்கிறது. களப்பணியாற்றும் அலுவலர்களின் எண்ணிக்கையை விட மேற்பார்வை பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகம் என்ற நிலையில், 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' அமல்படுத்தப்படும் போது, பதவியிடங்கள் குறைக்கப்படும்; பதவி உயர்வு கைநழுவும் என்பதால், அவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர்,' என்றனர்.
திட்டம் அமலுக்கு வராததால் விவசாயிகளும் அதிருப்தியில் உள்ளனர். தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில், உழவர் தொடர்பு அலுவலர் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா, அல்லது ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த விவாகாரம் தொடர்பாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் துறை முதன்மை செயலரை சந்தித்து, திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவது என, திட்டமிட்டுள்ளனர்.