/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லோக்சபா தேர்தல் முடிந்ததால் மும்முனை மின்சாரம் தடையா!
/
லோக்சபா தேர்தல் முடிந்ததால் மும்முனை மின்சாரம் தடையா!
லோக்சபா தேர்தல் முடிந்ததால் மும்முனை மின்சாரம் தடையா!
லோக்சபா தேர்தல் முடிந்ததால் மும்முனை மின்சாரம் தடையா!
ADDED : ஏப் 27, 2024 12:51 AM
திருப்பூர்;விவசாயிகள் நலன் கருதி, அரசின் சார்பில், மும்முனை இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மின் பகிர்மான மாவட்டத்தில் மட்டும், விவசாய பணிக்கென, 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய கணக்கெடுப்பு கூறுகிறது. இந்நிலையில், இரவில் மும்முனை மின் சப்ளை சீராக இல்லை என, விவசாயிகள் கூறி வருகின்றனர்.
'கடந்த, 19ம் தேதி முதல் மும்முனை மற்றும் இருமுனை மின்சாரம், விவசாய பகுதிகளுக்கு பகலில், 7 மணி நேரம் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது; இரவில் நிறுத்தப்படுகிறது; தேர்தல் முடிந்த கையோடு, தி.மு.க., அரசு மும்முனை மின்சாரத்தில் கை வைக்கிறது' என, அவிநாசி ஒன்றியம் கானுார்புதுார், கருவலுார், தண்டுக்காரன்பாளையம், தத்தனுார், போத்தம்பாளையம் கிராமங்களில் உள்ள விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற் பொறியாளர் (பொது) விஜயஈஸ்வரனிடம் கேட்ட போது, ''கோடையில் மின் பயன்பாடு மற்றும் தேவை மாறுபடுகிறது; சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் குறைவாகவும் என, மாறுபட்ட நிலை காணப்படுகிறது.
இதனால் தான் மும்முனை மின்சாரத்தில் தடை ஏற்படுமே தவிர, வேறு காரணமில்லை. மின் தேவை இயல்பாக இருந்த போது, 24 மணி நேரம் கூட, விவசாய தேவைக்கான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஓரிரு நாளில், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.

