ADDED : பிப் 22, 2025 07:09 AM

திருப்பூர்; ''பி.என்., ரோடு அமைக்கும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை'' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூரிலிருந்து பெருமாநல்லுார் செல்லும் ரோடு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. புஷ்பா சந்திப்பு ரவுண்டானா முதல் மேட்டுப்பாளையம், புது பஸ் ஸ்டாண்ட், பாண்டியன் நகர் வழியாக இந்த ரோடு பெருமாநல்லுார் சென்று சேருகிறது.
திருப்பூரின் வளர்ந்து வரும் பகுதியாக உள்ள பல்வேறு முக்கிய குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளும் இந்த ரோட்டில் அமைந்துள்ளன. இந்த ரோடு தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின், தார் ரோடு அமைக்கப்படுகிறது.
இந்த ரோட்டில் ஒரு சில இடங்கள் தவிர பெரும்பாலும் ரோட்டில் மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது புதிய ரோடு போடும் பணி மேற்கொள்ளும் நிலையில், இவற்றை அகற்றி விட்டு ரோடு பணி மேற்கொள்ளாமல், அப்படியே புதிய ரோடு அமைக்கின்றனர்.
மையத்தடுப்பு அமைந்த இடத்தில் தார் மற்றும் ஜல்லி போடப்படுவதில்லை. மேலும், ரோடு போடும் பணியில் ஈடுபட்டுள்ள இயந்திரங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாமல் தார் மற்றும் ஜல்லியும், மேற்பரப்பில் முறையாக சமன்படுத்தாமல் விடுபட்டு கிடக்கிறது.
புதிய ரோடு அமைக்கும் போது, மையத்தடுப்புகளை இடமாற்றி வைத்து, ரோடு போட்ட பின் மீண்டும் அமைக்க வேண்டும். இதுபோன்ற முறையற்ற வகையில் ரோடு அமைத்தால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.

