/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
/
கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
ADDED : ஆக 25, 2024 12:50 AM

பல்லடம்;பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சி, மாநில அளவில் ஐ.எஸ்.ஓ., தரச் சான்றை பெற்று முன்மாதிரி ஊராட்சியாக திகழ்கிறது.
முன்னொரு காலத்தில், இவ்வழியாக வந்த அரசன் இங்கு தங்கியதால் 'கோ'தங்கிபாளையம் என்று கூறப்பட்டு, பின்னாளில், கோடங்கிபாளையம் என பெயர் மருவியது. ஊராட்சியில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
விசைத்தறி, விவசாயம் மற்றும் கல்குவாரி தொழில் ஆகியவை இங்கு பிரதானமாக உள்ளன. ஊராட்சியின் நிர்வாக செயல்பாடுகள், குடிநீர் வினியோகம், கழிவு நீர் கால்வாய் பராமரிப்பு, தெரு விளக்கு, குப்பை மேலாண்மை உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றிய ஊராட்சியாக திகழ்வதால், சிறந்த நிர்வாக செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, ஊராட்சிக்கு ஐ.எஸ்.ஓ., தரச் சான்று கிடைத்துள்ளது.
ஊராட்சித் தலைவர் பழனிசாமி கூறுகையில், 'ஊராட்சியில் உள்ள இளைஞர் நற்பணி மன்றங்கள், தொழில் துறையினர், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் உள்ளதால், ஊராட்சியை சிறப்பாக செயல்படுத்த முடிகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நுாறு சதவீத குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஊராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 14 இடங்களில் தாவரவியல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்துக்கும், திருப்பூர் மாவட்டத்தில், கோடங்கி பாளையம் கிராமத்துக்கும் ஐ.எஸ்.ஓ., தரச் சான்று கிடைத்துள்ளது.
மாநில அளவில் என்பதுடன், திருப்பூர் மாவட்டத்தில் தரச் சான்று பெற்ற முதல் ஊராட்சி என்பதில் பெருமை கொள்கிறேன்' என்றார்.

