/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமைப் போர்வையை பாழ்படுத்தும் ‛கான்கிரீட் ' காடு
/
பசுமைப் போர்வையை பாழ்படுத்தும் ‛கான்கிரீட் ' காடு
UPDATED : மே 05, 2024 12:47 PM
ADDED : மே 05, 2024 12:08 AM

'கோடை காலம்...இவ்வளவு கொடூரமாக துவங்கும்' என, யாரும் நினைத்திருக்கவில்லை. அந்தளவு, கோடையின் துவக்கமே, வெளியில் தலைக் காட்ட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது.
சர்வ சாதாரணமாக, 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பம் தகிக்கிறது; டூவீலரில் பயணிப்பேர், வெப்ப அலையின் தாக்கத்தை நன்கு உணர்கின்றனர். பல இடங்களில் இயல்பை விட, 5,6 டிகிரிக்கு மேல் வெப்பம் சுடுகிறது.
'பசுமை போர்வைக்கு சிவப்பு கம்பளம் விரிக்க தவறியதால் தான், வாட்டும் வெயிலில் வதங்கிப் போகிறோம்' என்ற புலம்பல், ஊரெங்கும் ஒலிக்க துவங்கியிருக்கிறது. 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்' என்ற கோஷம், சற்று அதிகமாகவே ஒலிக்க துவங்கியிருக்கிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு, அனைத்து இடங்களிலும் இருக்கிறதா என்றால், 'இல்லை' என, ஆணித்தரமாக சொல்லிவிட முடியும்.
'வாசல் படியே இல்லாமல் கட்டப்படும் வீடுகளில் எப்படி மரம் வளர்க்க முடியும்?' என்ற கேள்வி தான், அதற்கான பதில். நகர்ப்புறங்களில், புற்றீசல் போல் பெருகியுள்ள கட்டடங்கள் இடைவெளியின்றி தான் கட்டப்பட்டுள்ளன. 'கட்டட விதிமுறை சரியாக பயன்படுத்தப்படுவதில்லை' என்பது தான், அதற்கு காரணம். உதாரணமாக, 1,200 சதுர அடியில் வீட்டுமனை வாங்கி இருந்தால், அதில் முழுவதுமாக வீடு கட்ட முடியாது. நிலத்தை சுற்றி நான்கு பக்கமும் இடம் விட்டு, நடுவில் தான் வீடு கட்ட வேண்டும். 'எவ்வளவு இடம் விட வேண்டும்' என்பது நிலம் சார்ந்த வரையறைக்கு உட்பட்டு மாறுபடும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தனித்தனி வரைமுறை உண்டு.வீட்டின் பின்பக்கம் மற்றும் இரு புறங்களிலும், குறைந்தது, 5 அடி முதல் இடம் விட்டு தான் கட்ட வேண்டும். தங்கள் வீட்டின் எல்லைக்குள்ளேயே வாகனங்கள் நிறுத்தவும், காற்றோட்டம் இருக்கவும், மரம், செடி, கொடி வளர்க்கவும் தான் இந்த வரைமுறை.
இவ்வாறு, வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதற்கேற்ப தான், வீடு கட்டும் விதிமுறைகளும் உள்ளன. ஆனால், ஒரு அடி நிலம் கூட வீணாகக்கூடாது என்ற அங்கலாய்ப்பில், சற்றும் இடைவெளியின்றி, விதிமீறி வீடுகளை கட்டிக் கொள்பவர்கள் ஏராளம்.
'இவ்வாறு, கான்கிரீட் காடுகளாக நிலப்பரப்பு முற்றிலும் மாறுவதன் விளைவு தான், பசுமைப் போர்வையை ஏற்படுத்த வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது' என்கின்றனர், பசுமை ஆர்வலர்கள்.