/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விழித்து கொள்ள வேண்டிய தருணம் இது! பனியன் சாம்ராஜ்ஜியத்தை பாதுகாக்க... ஓரணியில் திருப்பூர் திரள வேண்டும்
/
விழித்து கொள்ள வேண்டிய தருணம் இது! பனியன் சாம்ராஜ்ஜியத்தை பாதுகாக்க... ஓரணியில் திருப்பூர் திரள வேண்டும்
விழித்து கொள்ள வேண்டிய தருணம் இது! பனியன் சாம்ராஜ்ஜியத்தை பாதுகாக்க... ஓரணியில் திருப்பூர் திரள வேண்டும்
விழித்து கொள்ள வேண்டிய தருணம் இது! பனியன் சாம்ராஜ்ஜியத்தை பாதுகாக்க... ஓரணியில் திருப்பூர் திரள வேண்டும்
ADDED : ஜூலை 02, 2024 12:19 AM

திருப்பூர்;கடந்த 40 ஆண்டுகால உழைப்பால் ஈட்டப்பட்ட திருப்பூர் பனியன் சாம்ராஜ்யம் எனும் வெற்றிக்கு, பல்வேறு மாநிலங்களும் தற்போது பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றன. திருப்பூரில் வேரூன்றி வளர்ந்துள்ள பனியன் தொழில் கிளையை, பின்தங்கிய தென்மாவட்டங்களில் நீட்டிக்க முயற்சிக்கலாமே என்பது, தொழில்துறையினரின் ஒருமித்த கோரிக்கை.
பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தில், நாட்டின் தலையாய நகரமாக உயர்ந்துள்ளது திருப்பூர். நாட்டின், 21 மாநிலங்களை சேர்ந்த மக்கள், பனியன் தொழிலாளராக திருப்பூரில் தங்கியிருக்கின்றனர். தமிழகம் செல்லும் தங்களது மக்களின் பாதுகாப்பை மட்டுமே கவனித்து வந்த வடமாநிலங்கள், தற்போது தொழில் முனைவோராக மாற்றும் முயற்சியை துவங்கியுள்ளன.
திருப்பூரில் தங்கி சில ஆண்டுகளில் தொழில்முறைகளை கற்ற, தொழிலாளர்கள் குழுக்களை கொண்டு, பீகார், ம.பி., ஒடிசா, கேரளா போன்ற மாநிலங்களில், சிறிய பனியன் உற்பத்தி யூனிட்டுகள் துவங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.
காலம் வந்து விட்டது
இதேநிலை தொடர்ந்தால், திருப்பூரில் உற்பத்தியான பனியன் ஆடைகள், டில்லி வரை விற்பனைக்கு சென்று கொண்டிருக்கும் நிலை மாறும். அது பரவாயில்லை, ஒட்டுமொத்த பனியன் தொழிலும், பிற மாநிலங்கள் நகர்ந்து விடுமோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் இருந்து திருப்பூரை தற்காத்துக் கொள்ள, ஒட்டுமொத்த தொழில் அமைப்புகளும் ஓரணியில் திரள வேண்டிய காலம் வந்து விட்டது.
திருப்பூர் பனியன் தொழிலின் இருதய பகுதியாக இருப்பது, காதர் பேட்டை; கடந்த சில மாதங்களாக நடந்த கணக்கெடுப்பில், 188 வகையான பனியன் ஆடைகள், திருப்பூரில் இருந்து விற்கப்பட்ட நிலை மாறிவிட்டது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது, வடமாநிலங்களில் உற்பத்தி துவங்கியது தெரிய வந்துள்ளது.
வடமாநிலங்களில் இருந்து செயற்கை நுாலிழை துணியை, திருப்பூரில் செயல்படும் சிறு நிறுவனங்கள் வாங்கி, ஆடை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இது, வடமாநிலங்களில் உற்பத்தியாகும் ஆடைகளை காட்டிலும், கிலோவுக்கு, 18 ரூபாய் வரை விலை அதிகம். இந்த ஒரே காரணத்தை பயன்படுத்தி, வடமாநிலங்களில் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி வலுவடைந்து வருவதாக, தொழில்துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
'கூட்டுறவே நாட்டுயர்வு,' என்ற தத்துவத்தின் அடிப்படையில், திருப்பூர் பனியன் தொழில்துறையினர் கூட்டு முயற்சியால் வெற்றியை ஈட்ட வேண்டும். தற்போதைய திருப்பூரின் ஒட்டுமொத்த தேவைகளையும், மத்திய, மாநில அரசுகளின் உதவி குறித்தும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டுக்குழுவை அமைத்து, விரைவில் மத்திய, மாநில அரசுகளை சந்திக்க வேண்டும். திருப்பூரின் பாதிப்பை மத்திய அரசுக்கு தெரிவித்தால் மட்டுமே, சரியான தீர்வு கிடைக்கும். அதன்படி, மத்திய பட்ஜெட்டுக்கு முன்பாகவே, திருப்பூர் கூட்டுக்குழுவினர், டில்லி சென்று, மத்திய அமைச்சர்களை சந்தித்து, தொழில் பாதுகாப்பு கோரிக்கையை முன்வைத்து, நிறைவேற்றி கொடுக்க வலியுறுத்த வேண்டும்.
முன்னதாக, தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து, ஒட்டுமொத்த கோரிக்கைகள் தொடர்பான பொது கோரிக்கையை தயாரித்து, அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது, அனைவரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
'தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகி விடக்கூடாது,' என்பதை உணர்ந்து, தற்போதிருந்தே திருப்பூர் பனியன் தொழில் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு குறித்து சிந்தித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 'சைமா' உட்பட, அனைத்து சங்கங்களும் ஓரணியில் திரள வேண்டும்