/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாத்துக்குடி கன்டெய்னர் லாரிகளுக்கு கடிவாளம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நிம்மதி
/
துாத்துக்குடி கன்டெய்னர் லாரிகளுக்கு கடிவாளம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நிம்மதி
துாத்துக்குடி கன்டெய்னர் லாரிகளுக்கு கடிவாளம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நிம்மதி
துாத்துக்குடி கன்டெய்னர் லாரிகளுக்கு கடிவாளம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நிம்மதி
ADDED : செப் 03, 2024 11:47 PM
திருப்பூர்;இறக்குமதி சரக்கை கொண்டு வரும் லாரிகள், துாத்துக்குடிக்கு ஏற்றுமதி சரக்கை ஏற்றிச்செல்ல, சுங்கவரித்துறை தடைவிதித்துள்ளதால், ஏற்றுமதியாளர்கள் நிம்மதி அடைந்துள்னளர்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பெரும்பாலும் துாத்துக்குடியை சார்ந்தே இயங்குகிறது. அவசரகால ஆர்டர்கள் மட்டும், மும்பை அல்லது கொச்சின் துறைமுகம் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூரில் இருந்து, அங்கீகாரம் பெற்ற, 500க்கும் அதிகமான கன்டெய்னர் லாரிகள் இயக்கப்படுகின்றன.
சுங்கவரித்துறை விதிமுறைகளின்படி, இறக்குமதி சரக்கை எடுத்து வரும் துாத்துக்குடி கன்டெய்னர் லாரிகள், திரும்பி செல்லும் போது எவ்வித சரக்கையும் ஏற்றிச் செல்லக்கூடாது. மாறாக, ஏற்றுமதி சரக்குகளை, குறைந்த வாடகையில் விதிமுறையை மீறி எடுத்துச்செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விதிமுறைகளை மீறி, இறக்குமதிக்காக வரும் கன்டெய்னர்களில், ஏற்றுமதி சரக்குகளை ஏற்றிச்செல்லும் போது, ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலும், சரக்குக்கு எவ்வித காப்பீடு உதவியும் கிடைக்காது. சுங்கவரித்துறை விதிகளுக்கு உட்பட்டே சரக்குகளை அனுப்புமாறு, ஏற்றுமதியாளர் சங்கமும், தனது உறுப்பினர்களை அறிவுறுத்தியது.
இதனால், துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் கன்டெய்னர் லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்தது. முறைகேடாக இயங்கும் கன்டெய்னர் லாரிகளை சிறை பிடிப்போம் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, சுங்கவரித்துறை நேரடியாக தலையிட்டு, இப்பிரச்னையை விசாரிக்க துவங்கியது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் இதுதொடர்பாக சுங்கவரித்துறை அதிகாரிகளிடம் பேசினார். அதன்பின், சுங்கவரித்துறை நடவடிக்கை வேகமெடுத்தது. தற்போது, இறக்குமதி சரக்கு ஏற்றிவரும் லாரிகள், ஏற்றுமதிக்கான பொருட்களை துாத்துக்குடி துறைமுகம் ஏற்றிச்செல்லக்கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
லாரிகளுக்கு கட்டுப்பாடு
இதுகுறித்து திருப்பூர் எக்ஸ்போர்ட் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் தலைவர் ரத்தினசாமி கூறுகையில்,''திருப்பூர் போன்ற நகரங்களில் இருந்து ஏற்றுமதி சரக்கை ஏற்றிச்செல்ல கூடாது என, சுங்கவரித்துறை எச்சரித்துள்ளது. துாத்துக்குடி துறைமுகம் தவிர, மற்ற துறைமுகங்களில், 2004ம் ஆண்டு முதல், இதற்கு தடைஉள்ளது; தற்போது துாத்துக்குடி துறைமுகத்திலும் கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளது,'' என்றார்.
தேவையான உதவி செய்வோம்!
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தொடர்புடைய சங்கங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தேவையான உதவிகளை செய்யும்.
சாயத்தொழில் பிரச்னைக்காக குரல்கொடுத்து வருகிறோம். 'எக்ஸ்போர்ட் கூட்ஸ்' சரக்கு போக்குவரத்து தொடர்பான பிரச்னை தெரியவந்ததும், சுங்கவரித்துறையிடம் பேசி, இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில் தொடர்புடைய எந்தவொரு பிரிவில் பாதிப்பு ஏற்பட்டாலும், தேவையான உதவி செய்வோம்,'' என்றார்.